அயோத்தி ராமர் கோயிலுக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் காவிக்கொடியுடன் 1,425 கி.மீ தூரம் நடைபயணம் செல்கிறார்.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
இதில் பக்தர்கள் மட்டுமன்றி பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். இதனால் அயோத்தியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஷப்னம் என்ற இஸ்லாமிய பெண் 1,425 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இவருடன் அவரது நண்பர்களான ராமன்ராஜ் சர்மா, வினீத் பாண்டே ஆகியோரும் உள்ளனர்.
இதுகுறித்து ஷப்னம் கூறுகையில், “நான் ஒரு முஸ்லீமாக இருந்தாலும் எனக்கு ராமர் மீது அசைக்க முடியாத பக்தி உள்ளது. ராமரை வணங்குவதற்கு இந்துவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நல்ல மனிதனாக இருந்தாலே போதும். தினமும் நான் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரம் நடக்கிறேன். இதனை நம்பிக்கையின் பயணமாக தான் பார்க்கிறோம்.
வரும் வழியில் பொலிஸாரும், மக்களும் எங்களுக்கு உணவு, தங்குமிடம் கொடுத்து உதவி செய்கின்றனர். ஆனாலும், சிலர் எங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதனை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்றார்.
தற்போது, காவிக்கொடியுடன் நடைபயணம் செல்லும் இஸ்லாமிய பெண்ணின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.