புறக்கோட்டையில் உள்ள பிரபல உண்டியல் வர்த்தகர்கள் குழுவை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட கூட்டு பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா, குடு சதலிந்து மற்றும் கணேமுல்ல சஞ்சீவ ஆகியோரின் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை புழக்கத்தில் விடும் புறக்கோட்டையில் உள்ள பிரபல உண்டியல் வர்த்தகர்கள் குழுவே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளனர்.
இந்த உண்டியல் வர்த்தகர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வெளியாகி உள்ளதாகவும், அவர்கள் வரும் நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புறக்கோட்டையில் உண்டியல் முறையில் பணம் புழங்கும் இந்த வர்த்தகர்கள் மூலம் இந்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பல பில்லியன் ரூபா பணத்தை டுபாய்க்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஹரக்கட்டா, குடு சாலிந்து மற்றும் கணேமுல்ல சஞ்சீவ ஆகியோர் பல வருடங்களாக டுபாயில் தலைமறைவாகி அந்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியதாகவும் ஹரக்கட்டா மட்டும் இரண்டு வருடங்களில் 4000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த உண்டியல் வர்த்தகர்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையிலான தொலைபேசி தொடர்புகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியதை அடுத்து, அவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு இந்த சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள குடு சாலிந்துவின் 48 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு வருட காலப்பகுதியில் இந்த வங்கிக் கணக்குகள் ஊடாக 10,000 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.