முப்படையினர் மீது குற்றம் சுமத்தி அவர்கள் மீது விசாரணை மேற்கொள்வதற்கு நான் தயாரில்லையென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பலாலி படைத்தளத்தில் படையினர் 4000 படையினர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நான் தயாரில்லை. அத்துடன் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் நான் நாட்டை ஆட்சி செய்வதற்குத் தயாரில்லை.
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்றலுடன், முப்படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்யுமாறு கோருகிறார்கள். நான் அதைச் செய்வதற்குத் தயாரில்லை.
தமது கடமையை பொறுப்பை சரியாகச் செய்யாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம், பெருமளவு டொலர்களையும் பவுண்ட்ஸ்களையும் பெற்றுக் கொண்டு, பாதுகாப்புப் படைகள் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்.
அனைத்துலகக் தொடர்புகள் மூலம், அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல் ஆட்சியை நடாத்த நான் தயாராக இல்லை. அவர்கள் கூறுவதுபோல் படையினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் தயாராக இல்லை. இதில் நான் தெளிவாக உள்ளேன்.
மேலும் நாட்டின் இறைமை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கே நான் முன்னுரிமையளிப்பேன். அத்துடன் நான் முப்படைகளின் பிரதம தளபதியாக இருக்கும் வரைக்கும் போர்வீரர்களின் பாதுகாப்பையும், கௌரவத்தையும் உறுதிப்படுத்துவேன் எனவும் உறுதியளித்துள்ளார்.