சர்ச்சைக்குரிய இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை ஆசிய இணையக் கூட்டமைப்பு (AIC) மறுத்துள்ளது.
முன்னணி இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களான (Meta)மெட்டா, (Google) கூகுள், (Apple)அப்பிள் மற்றும் (Amazon)அமேசான் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு தொழில் சங்கமான ஆசிய இணையக் கூட்டமைப்பு, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அலஸின் சில வலியுறுத்தல்கள் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தை உருவாக்கும் முன்னேற்றங்களை துல்லியமாக பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளது.
இணையப் பாதுகாப்பு சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு தொழில்நுட்ப துறை பிரதிநிதிகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது அமைச்சர் அலஸ் தெரிவித்திருந்தார்.
“நிச்சயமாக, நாங்கள் ஆசிய கூட்டணியுடன் விரிவான விவாதங்களை நடத்தியுள்ளோம், அங்கு அது சுமார் 15 நிறுவனங்களை உள்ளடக்கியது. எங்கள் குழு சிங்கப்பூர் சென்று அவர்களுடன் மூன்று நாட்கள் கலந்துரையாடியதன் அதன் பிறகு அவர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்”என்று அமைச்சர் கூறியிருந்தார்.
சட்டமூலத்திற்கான திருத்தங்களுக்கு AIC அங்கீகாரம் அளித்துள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
AIC இன் நிர்வாக இயக்குனர் ஜெஃப் பெயின் தெரிவித்திருந்ததாவது, “அமைச்சரின் அறிக்கை, சட்டமன்ற செயல்முறை முழுவதும் கூட்டணி செய்த கணிசமான பங்களிப்பை துல்லியமாக பிரதிபலிக்கவில்லை.
AIC தனது பங்களிப்புகளில் விரிவான சமர்ப்பிப்புகள் மற்றும் சிங்கப்பூரில் AIC ஏற்பாடு செய்த வருடாந்திர இணையப் பாதுகாப்பு மன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதிகளை விருந்தளிப்பது போன்ற ஈடுபாடுகள் உள்ளடங்கும்.
இந்த ஈடுபாடுகள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் இறுதியில் கடந்த ஆம் திகதியன்று அமைச்சகத்திடம் நாங்கள் கடைசியாக சமர்ப்பித்ததன் மூலம் முடிவடைந்தது.”என்று பெயின் கூறியுள்ளார்.
எனினும் ‘தற்போதைய வடிவத்தில் சட்டமூலம் செயல்பட முடியாது’ மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் சீரமைக்க விரிவான திருத்தங்கள் தேவை என்பதை ஆசிய இணையக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.