அரசியலமைப்புத் திருத்தமே அன்றிய, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய செயற்குழு ஆகியவற்றிடம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெளிவாக கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் இந்த முடிவை நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன ஏகமனதாக நிறைவேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியமையானது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம். அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடல்ல எனவும் அமைச்சர் விஜயமுனி சொய்சா இதன்போது தெரிவித்துள்ளார்.