“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்” என்ற செய்தி வெளிவந்ததும் யாழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர் அவரை காண்பதற்கு.
தமது ஏக்கங்களை கூறுவதற்கும், தீர்வின்றி தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளவும், தமது உறவுகள் குறித்து கேள்வி எழுப்பியெழுப்பவும், மனக்குமுறல்களை நாட்டின் தலைவரிடம் கொட்டுவதற்கும் காத்திருந்தனர் யாழ் மக்கள்.
ஜனாதிபதி வரும் திகதி நெருங்கியது என்றவுடன் அவருடைய கவனத்தை தம் பக்கம் ஈர்த்துக்கொள்வதற்கு அனைவரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகினார்கள்.
அத்துடன் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்தை நடாத்திக்கொண்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் ஜனாதிபதி வருகை தரும் அந்த தினத்தில் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டார்கள் தமிழ் மக்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சடணடைந்த பின்னர் காணாமல ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், மற்றும் வேலையில்ல பட்டதாரிகள் என அனைவரும் கூடினார்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கும், அவரிடம் தீர்வினை கேட்டறியவும்.
இதில் ஜனாதிபதியை சந்திப்பதற்கென்று சிலர் தாயாக இருந்தார்கள், ஜனாதிபதியும் அவர்களை சந்திப்பதற்கு தாயாராக இருந்த நிலையில், அங்கு நடந்ததோ சற்றும் எதிர்பாராத ஒன்று.
ஆம்! பாதிக்கப்பட்ட மக்களை காண தயாராக இருந்த ஜனாதிபதி வேறு வழியாக சென்றுவிட்டார்….
காத்திருந்த மக்களுக்கு இந்த செய்தி பேரிடியாக விழுந்ததுடன், தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி போராட்டம் நடாத்தினார்கள்.
எம்மை காண வந்த ஜனாதிபதி காணாமல் போய் விட்டார் என்று கூறி அழுத தாய்க்குலங்கள் எமது பார்வையில் பட்டார்கள்.
வீதியில் சமைத்து விதியில் உறங்கிக்கொண்டிருக்கும் பட்டதாரிகளைக்கூட காணாமல் சென்று விட்டார் தலைவர்.
ஏமாற்றப்பட்ட மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி மாகாணசபை உறுப்பினருடன் வீதியில் அமர்ந்தனர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அங்கிருந்த சில அரசியல்வாதிகளுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டு செய்வதறியாது தத்தளித்தனர்.
எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் உரை அங்கிருந்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்னை ஏற்படுத்தும் விதமாக, சமாதானத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும் மக்களை சந்திக்காமல் சென்றது அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.
“ஜனாதிபதியிடம் கூறுங்கள்” என்ற அலுவலகத்தை மட்டும் திறந்து விட்டு நாம் நேரடியாக கூறுவதை கேட்காமல் சென்றுவிட்டாரே ஜனாதிபதி என மக்கள் கோசங்களை எழுப்பினர்.
சுமார் 20 நிமிடங்கள் வரை தமது போராட்டத்தையும் ஆதங்கத்தையும் மக்கள் வெளிப்படுத்தினார்கள்.
ஏன் இந்த நிலைமை? ஜனாதிபதி மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? காண்பதாக கூறிவிட்டு காணாமல் சென்றது ஏன்? இதற்கு விடை நாட்டின் தலைவர் ஜனாதிபதியிடமே உண்டு.
ஆளுநரின் அலுவலகத்தில் ஜனாதிபதி வந்த நிலையில் சாவகச்சேரியில் வாள் வெட்டு, நகர் முழுதும் பலத்த பாதுகாப்பு, ஆக்ரோசத்தில் மக்கள் இவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவா மக்களை பார்க்காமல் சென்றார்.
ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்று. முப்படைகளின் தலைவராக ஜனாதிபதி காணப்படும் போது அவரே பாதுகாப்பு வேண்டாம் என்று கூறினாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது முக்கியமான ஒன்று. இந்த நிலையில் யாரை குறை கூறுவது, மக்களையா? ஜனாதிபதியையா? பாதுகாப்பு தரப்பினரையா?
எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி காத்திருந்த மக்களை சந்திக்காமல் னெ்றது அங்கிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது மட்டும் உண்மை.