பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏவாக இருப்பவர் கருணாநிதி. இவருடைய மகன் ஆண்ட்ரோ வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த பெண்ணை ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவனத்துக்கு செல்லவே அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு முழுவதும் இந்த செய்தி பரவிய நிலையில், தாக்கப்பட்டதாக கூறிய இளம்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினார்.
அப்போது அந்த பெண், “அவர்கள் கொடூரமாக தாக்கியதாகவும், சிகரெட்டால் சூடு வைத்ததாகவும், மிளகாய் தூள் கலந்த தண்ணீரை குடிக்க செய்ததாகவும்” குற்றம் சாட்டினார். பின்னர், திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆண்ட்ரோ மற்றும் மெர்லினா தலைமறைவாகினர்.
இதன்பின்னர், இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆண்ட்ரோ மற்றும் மெர்லினா ஆகியோரை தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.