பொதுவாகவே நம்மில் பலரின் முக்கிய உணவாக காணப்படுவது சோறு. இன்னும் சொல்லப்போனால் சோறு தான் முக்கியம் என்று வாழ்பவர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு அரிசி சாதம் முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆனால் உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரையில் அதிகமாக சோறு சாப்பிடுவது பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அரிசி மற்றும் கோதுமையை பிரதான மூலப்பொருளாக கொண்டே பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. குறிப்பாக அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் உடனடியாக உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றது.
தமிழர்களை பொருத்தவரையில் அனேகமானோர் ஒரு நாளும் சோறு சாப்பிடாமல் இருப்பதில்லை. சிலர் மூன்று வேளையும் கூட சோறு சாப்பிடுவார்கள். ஆனால் அதிகமாக அரிசி சாதம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதக விளைவுகளை தோற்றுவிக்கும்.
உடலுக்கு போதுமான நார்ச்சத்து கிடைக்காவிட்டால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகள் போற்ற கோளாறுகள் ஏற்பட ஆரம்பிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, மூன்று வேளை சாதம் சாப்பிடுவது உடல் நலத்தை வலுவாக பாதிக்கும்.
பருப்பு வகைகள், காய்கறிகள், கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை அதிகமாக சாப்பிட வேண்டியது அவசியம். இவை அனைத்தும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
பொதுவாகவே வெள்ளை அரிசியில் நார்ச்சத்து குறைவாக காணப்படும். எனவே வெள்ளை அரிசியை குறைவாகவே சாப்பிட வேண்டும்.
வெள்ளை அரிசியில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இதனை அதிகமாக எடுத்துக்கொள்வது தொப்பையை ஏற்படுத்துவதோடு உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாக அமைகின்றது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் இது முக்கிய காரணமாக அமைகின்றது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல.
மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் ஊட்டச்சத்துக்கள் குறைவு. இந்த சத்துக்களின் குறைபாடு எலும்புகள் மற்றும் பற்கள் உட்பட பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
தினமும் சோறு அதிகம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எப்போதும் உணவில் சமநிலை என்பது இன்றியமையாதது.
எந்த உணவாக இருந்தாலும் அதை மட்டுமே தொடர்ச்சியாக சாப்பிடுவது நல்லதல்ல. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் வகையில் உணவுகளை தெரிவு செய்ய வேண்டியது அவசியம்.