ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றிய போது, பொறுப்புக்கூறலுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி எந்தத் தகவலையுமே வெளியிடவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், 2012ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையில் நிறைவேற்றப்பட்ட அத்தனை தீர்மானங்களிலும், பிரதான அம்சம் பொறுப்புக்கூறல் தான்.
ஆனாலும் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் எத்தகைய முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்ற விளக்கத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொடுக்கத் தவறியுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றும் அர்ப்பணிப்புடன் அரசாங்கம் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தாலும், எத்தகைய பொறுப்புக்கூறல் பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போகிறது என்ற கேள்விக்கு எந்தப் பதிலையும் அவர் அளித்திருக்கவில்லை.
தனியே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பற்றிய ஒர் பந்தி மாத்திரம் அவரது அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பது பொறுப்புக்கூறலின் ஒர் அங்கமே தவிர, அதுவே இறுதியான தீர்வாக இருக்க முடியாது.
அதேவேளை, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரு நடவடிக்கையாக, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையை அவர் ஜெனீவாவில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
நாடெங்கும் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள், பொதுமக்களின் சாட்சியங்கள் மற்றும் 7000ற்கும் மேற்பட்ட எழுத்து மூல சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, ஜெனீவா அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரு கருவியாக அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது.
இதனை ஒரு வெற்றிகரமான செயற்பாடாக அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது.
உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு வழங்குதல், நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கான பொருத்தமான பொறிமுறைகளை வடிவமைக்கும் வகையில் இந்த அறிக்கை தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டிருக்கிறார்.
இதுதவிர, பொறுப்புக்கூறல் பற்றிய எந்தக் கருத்தையும் அவரது உரையில் காண முடியவில்லை.
நல்லிணக்க பொறிமுறைக்காக கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையானது, கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கான பரிந்துரையுடன் கூடியது.
நல்லிணக்கப் பொறிமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளை அது பிரதிபலித்திருந்தது.
இலங்கையில் உள்நாட்டு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட- ஒப்பீட்டளவில் அதிகம் சுதந்திரமான, மக்கள் கருத்தை அறியும் செயற்பாடாக இதனைக் குறிப்பிடலாம்.
இந்த செயலணியின் பெரும்பாலான பரிந்துரைகளும், கருத்துக்களும் பல்வேறு மட்டங்களிலும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.
உள்ளகப் பொறிமுறை ஒன்று சுதந்திரமாகவும் நம்பகமாகவும் செயற்பட முடியும் என்று உதாரணம் காட்டக்கூடிய அளவுக்கு இந்தச் செயலணியின் அறிக்கை இருந்தது. இதனை இந்தச் செயலணியின் வெற்றி என்று குறிப்பிடலாம்.
ஆனால், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காதமையை, உள்ளக பொறிமுறை எத்தனங்களுக்கான தோல்வியாகத் தான் பார்க்க வேண்டும்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட, சுதந்திரமான சர்வதேச நிபுணர்களைக் கொண்ட குழுவும், கூட வரவேற்றிருக்கிறது.
கடந்த வாரம் மங்கள சமரவீர ஜெனீவாவில் உரையாற்றிய பின்னர் இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கண்காணிக்கும் நிபுணர் குழு, தமது அறிக்கையை வெளியிட்டிருந்தது.
கடந்த 2015ம் ஆண்டு, 30/1 தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தத் தீர்மானத்தை இலங்கை எந்தளவுக்கு நடைமுறைப்படுத்துகிறது என்று கண்காணிப்பதற்காக இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ள கலந்தாலோசனை செயலணியை, அதன் எல்லாப் பரிந்துரைகளையும் ஒப்புக்கொள்ளாமலேயே பாராட்டுவதாக இந்தக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கலந்தாலோசனை செயலணியின் இறுதி அறிக்கையை நீதிக்கான ஒத்திசைந்த முழுநிறைவான வழித்தடமாக ஏற்கும் படியும், அதிலடங்கிய பல்வேறு பரிந்துரைகளையும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் கருதிப் பார்க்க முற்படும் படியும், இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையையே, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனை செயலணி தமது பரிந்துரையாக முன்வைத்திருந்தது.
ஆனால், அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அமைச்சர்கள் பலரும் கூறியிருந்தமை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை அரசாங்கமே அமைத்த நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் இறுதி அறிக்கை குறித்து அரசாங்கத்தின் ஆரம்ப எதிர்வினையே, மக்கள் எடுத்துரைத்த விருப்பங்களை அலட்சியமாகவும் கண்மூடித்தனமாகவும் மறுதலிப்பதாக உள்ளது என்று சுதந்திரமான நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியிருந்தது.
அமைச்சர்கள் மாத்திரமன்றி, அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவராக உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் கூட, அந்தப் பரிந்துரை குறித்து விசனம் வெளியிட்டிருந்தார்.
கலந்தாலோசனைச் செயலணி தமது ஆணையை மீறி செயற்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு மக்களின் கருத்துக்களை அறியும் ஆணையே வழங்கப்பட்டதாகவும், அவர்கள் அதற்கு அப்பால் சென்று தமது கருத்துக்களையும் முன்வைத்திருப்பதாகவும் சந்திரிகா குற்றம் சாட்டியிருந்தார்.
அதைவிட, கலந்தாலோசனை செயலணியின் எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விடயத்தில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் எதனைக் கூறியதோ அதுபோலவே சந்திரிகாவும் குறிப்பிட்டிருந்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்த சுதந்திரமான நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்பு குழுவின் அறிக்கையிலும் கூட, கலப்பு விசாரணைக்கான பரிந்துரையே முன்வைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்க விடயம்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து, நியாயமான உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வாய்ப்பில்லை என்பதே தமிழர் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு. அதனால் தான் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, 2009ஆம் ஆண்டு தொடக்கம் வலியுறுத்தப்பட்டு வந்தது. நாடு கடத்த தமிழீழ அரசும் அதே நிலைப்பாட்டில் தான் இருந்தது.
எனினும், 2015ஆம் ஆண்டு கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன்மொழிந்த பின்னர், சர்வதேச விசாரணைக் கோரிக்கை வலுவிழந்துள்ளது அல்லது வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிடினும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்த, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு கலப்பு விசாரணைப் பொறிமுறையையே உருவாக்கும் படி கோரியிருக்கிறது.
சர்வதேச நீதிபதிகளும் வழக்குத்தொடுனர்களும் பங்கேற்கும் கலப்புப் போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைப்பதற்கான பொருள் பொதிந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி பொறுப்புக்கூறல் கண்காணிப்புக் குழு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது என்று அதன் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
எனினும், இந்தக் கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற கேள்விக்கான விடை இன்னமும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் கேள்விக்கான பதிலை அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் வெறும் அறிமுகத்துடன் முடித்துக் கொண்டிருக்கிறார்.
எனினும், கடந்த மார்ச் 1ம் திகதி ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உப மாநாடு ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மங்கள சமரவீர, பொறுப்புக்கூறலுக்கான நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கான சட்டங்களை அரசாங்கம் இயற்றவில்லை என்று பதிலளித்திருந்தார்.
அதேவேளை, வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்றாலும் சரி, பங்கேற்காவிடினும் சரி, நீதிப்பொறி முறை நம்பகமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இங்கு கூட, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால், பொறுப்புக்கூறல் பொறிமுறை பற்றிய எந்தத் தெளிவான கருத்தையும் கூற முடியவில்லை.
கலந்தாலோசனை செயலணியின் அறிக்கை ஒன்றும் பைபிள் கிடை யாது, அதனை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கு என்ற அமைச்சர்களின் கருத்துக்களுக்கு மத்தியில், அந்த அறிக்கையை அரசாங்கம் எந்தளவுக்கு முன்னுரிமை கொடுத்து பொறுப்புக் கூறலுக்கான கருவியாகப் பயன்படுத்தப் போகிறது என்ற சந்தேகம் இருக்கிறது.
எவ்வாறாயினும், பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை பற்றிய எந்த முன்மொழிவையும் அரசாங்கம் ஜெனீவாவில் முன்வைக்காவிடினும், கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையை ஒரு தப்பிக்கும் உத்தியாகவே பயன்படுத்தியிருந்தாலும், அதுவே எதிர்காலத்தில் ஒரு பொறியாக மாறலாம்.
உள்ளகப் பொறிமுறையை மாத்திரமே வலியுறுத்தும் அரசாங்கம், அத்தகைய உள்ளகப் பொறிமுறை ஒன்றின் பரிந்துரையைக் கூட செயற்படுத்த முடியாது என்று அறிவிக்குமேயானால், அதனை சர்வதேச சமூகம் உள்ளகப் பொறிமுறைகளின் தோல்வியின் தொடர்ச்சியாகத் தான் பார்க்கும்.
அத்தகையதொரு நிலையை உருவாக்கத்தான் அரசாங்கம் இப்போது முயற்சிக்கிறதா?