முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு 83.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது எழுத்தாளர் இ ஜீன் கரோலை அவதூறாகப் பேசியதற்காக குறித்த தீர்ப்பை நியூயோர்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பெண் எழுத்தாளர் “இது வீழ்த்தப்படும் போது எழுந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும், மேலும் ஒரு பெண்ணை வீழ்த்த முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழக்கினுடைய தீர்ப்பானது மிகப்பெரிய தோல்வி” என்று தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் வழக்கறிஞர் ராபி கப்லான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாட்டில் உள்ள பணக்காரர்கள், பிரபலமானவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் பொருந்தும் என்பதை இன்றைய தீர்ப்பு நிரூபித்துள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெண் எழுத்தாளரது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு 18.3 மில்லியன் அமெரிக்க டொலரும் தண்டனைக்குரிய சேதங்களுக்காக 65 மில்லியன் அமெரிக்க டொலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.