புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியமும், அதற்காகப் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதன் நியாயப்பாட்டையும் வலியுறுத்தி சிவில் அமைப்புக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி பரப்புரை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
புதிய அரசமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்துவது தொடர்பில் சிவில் அமைப்புக்களும், தேசிய அரசின் அமைச்சர்களுக்கும் இடையில் பெப்ரவரி மாத ஆரம்பத்தில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் கடந்த வாரம் இந்த விடயம் தொடர்பில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்தநிலையில், புதிய அரசமைப்பை விரைவாக நிறைவேற்றுவதற்கு பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை சிவில் அமைப்புக்கள் ஆரம்பிக்கவுள்ளன. இந்தச் செயற்திட்டத்தில் 49 சிவில் அமைப்புக்கள் கைகோர்த்துள்ளன.
இலங்கை மன்றக் கல்லூரியில் எதிர்வரும் 15ஆம் திகதி இதன் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்படாது என்றும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாது என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாகத் தெரிவித்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.