நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை டுவிட் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களையும் தனது பாணியில் டுவிட் செய்து, சில பேரின் எதிர்ப்பையும், பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.
இடையில், இவரது நற்பணி மன்றத்தை சேர்ந்த சிலபேரை போலீசார் திடீரென கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு கமல் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பின்னர், தனது நற்பணி மன்றத்தை சேர்ந்த யாரும், யாரையும் தகாத சொற்களால் வசை பாடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், கமல்ஹாசன் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இன்று காலை சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் எதற்காக? என்பது இதுவரை தெரியவில்லை. கூட்டம் முடிவுக்கு பின்னர், இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.