ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரும் பாதுகாப்புத் தலைவருமான டிமித்ரி மெத்வதேவ், மேற்குலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் எதிரி நாடுகளுக்கு எதிராக மொத்த பலத்துடன் போரிடவும் தயார் என்றும், எதிரிகள் வரைபடத்திலேயே மிஞ்சமாட்டார்கள் எனவும் டிமித்ரி மெத்வதேவ் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் போருக்கான சாத்தியங்கள் அதிகரித்துவரும் நிலையில், உலக மக்கள் மூன்றாம் உலகப் போர் மூளும் ஆபத்து இருப்பதாக உணரத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியான டிமித்ரி மெத்வதேவ் தொடர்புடைய மிரட்டலை விடுத்துள்ளார்.
லெனின்கிராட் முற்றுகை முறியடிக்கப்பட்டதன் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய டிமித்ரி மெத்வதேவ், சோவியத் மக்களின் சாதனையின் நினைவை கவனமாகப் பாதுகாப்பதே நமது கடமை என்றார்.
நம்மைப் பொறுத்தவரை, இது நவ-பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தைரியம் மற்றும் விடாமுயற்சியின் ஆதாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் தற்போது ரஷ்யாவுக்கு சவால் விட முயன்று வருகிறது.
ஆனால் அது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றார் டிமித்ரி மெத்வதேவ். அதனால், நம்மால் இயன்ற அனைத்தையும் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ள டிமித்ரி மெத்வதேவ், 80 ஆண்டுகளுக்கு முன்னர் நமது எதிரிகளை பூமியில் இருந்தே அப்புறப்படுத்தியது போல என்றார்.
இதனிடையே, பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதரும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராகவோ அல்லது ரஷ்யாவை வெல்லலாம் என்றோ பிரித்தானிய ராணுவம் நம்பிக்கை வைத்திருந்தால், அதை இப்போதே கைவிடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெனின்கிராட் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய Andrei Kelin, நம்மை எவராலும் தோற்கடிக்க முடியவில்லை. இதுவே மிகவும் முக்கியமானது என்றார். சோவியத் நகரமான லெனின்கிராட் ஜேர்மானியப் படைகளால் 900 நாட்கள் முற்றுகையிடப்பட்டதை ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் Andrei Kelin அப்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முற்றுகையின் போது கொடூரமான பனிப்பொழிவு மற்றும் பட்டினியாலும் 800,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், 1944 ஜனவரி 27ம் திகதி ரஷ்ய படைகள் அந்த முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்ததையும் ரஷ்ய தலைவர்கள் தங்கள் நினைவேந்தல் உரையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தியே டிமித்ரி மெத்வதேவ் மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.