பெண்கள் உற்சாகம் ஒருபோதும் குறையாமல் இருக்கவேண்டும். ‘மூட் சரியில்லை’, ‘என்னவோ ஒருமாதிரியா இருக்குது, எதிலுமே ஆர்வம் இல்லை’ என்றெல்லாம் சொல்லாமல் இருக்கவேண்டும் என்றால், அதற்கான உணவை சாப்பிடுவது மிக அவசியம்.
* இரவு உணவுக்கு பின்னால் தூங்கிவிடுகிறோம். காலையில் விடிந்ததும் உடலுக்கும், மனதுக்கும் சக்தியும் உற்சாகமும் தேவை. அதற்காக காலை உணவை கட்டாயம் சாப்பிட்டாக வேண்டும். அதில் போதுமான அளவு சத்துக்களும் இருக்கவேண்டும். காலை உணவு மனதுக்கு உற்சாகத்தை தரும் என்பதால் அதனை ‘மூளைக்கான உணவு’ என்று கூறுகிறோம்.
* தவிடு நீக்காத தானியங்கள், பருப்பு- பயறு வகைகள், ஓட்ஸ் போன்றவைகள் அடங்கிய உணவுகள் சிறந்தவை. இந்த வகை உணவுகளை சாப்பிட்டால், ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையின் அளவு உயராது. உடலில் குளுக்கோஸ் அளவில் திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தால் அது மன நிலையை ஓரளவு பாதிக்கும்.
* சிறுவர், சிறுமியர்களுக்கு உற்சாகம் கிடைக்க ‘ஓமேகா 3 பாற்றி ஆசிட்’ கலந்த உணவுகளை அவர்களுக்கு வழங்கவேண்டும். சில வகை மீன்களிலும், பாதாம், ஆலிவ் ஆயில் போன்றவைகளில் மேற்கண்ட சத்து இருக்கிறது.
* மன ஆரோக்கியத்திற்கு ‘வைட்டமின்- பி’ சத்துள்ள உணவுகள் அவசியம். கீரை, பீன்ஸ் வகைகள், முளைவிட்ட தானியங்களில் இந்த சத்து அதிகம் இருக்கிறது. முட்டைக்கோஸ், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களையும் சாப்பிட்டு வரவேண்டும்.
* ‘மூட் சரியில்லை’ என்று கருதும் நேரத்தில் நீங்கள் விரும்பினால் காபியோ, டீயோ பருகலாம். அதில் இருக் கும் ‘கபீன்’ உங்களுக்கு உற்சாகத்தை தரலாம். காபியைவிட டீ சிறந்தது. அதில் இருக்கும் ‘எல் தியானின்’ என்ற அமினோ அமிலத்திற்கு மனநிலையை மேம்படுத்தும் சக்தியிருக்கிறது. ஆனால் காபி, டீ போன்றவைகளின் பயன்பாடு அளவுக்கு மீறிவிடக்கூடாது.
* நமது மனநிலையின் ரெகுலேட்டர் போன்று தைராய்டு சுரப்பி செயல்படுகிறது. இதன் சரியான இயக்கத்திற்கு அயோடின் அவசியம். அதற்காக அயோடைடு உப்பு வாங்கி பயன் படுத்த வேண்டும். கடல் உணவுகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.
* உடல் ஆரோக்கியத்தோடு மன ஆரோக்கியமும் கிடைக்க நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாக தூங்கவேண்டும். தேவைக்கு ஓய்வும் அவசியம்.