மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (29) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் காவல்துறை அத்தியட்சகர் சந்திரபால அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனையின் பெயரில் மன்னார் காவல்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் செளத்பார் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் ஏற்கனவே 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செளத்பார் பகுதியில் போதை மாத்திரைகள் விற்க முற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞனிடன் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் செளத்பார் புகையிரத நிலையப் பகுதி அருகில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை கொட்டில் ஒன்றிலே சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.