பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இந்தியா ஏற்றுமதி தடை விதித்துள்ளதால், இரண்டாவது காலாண்டில் பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி வரலாறு காணாத அளவுக்கு உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இந்தியா ஏற்றுமதி தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த முடிவு, ஏற்றுமதியாளர்களை பாகிஸ்தான் பக்கம் திருப்பியதுடன், 16 ஆண்டுகளில் இல்லாத உயர் விலைக்கு தானியங்களை வாங்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இதனால் பாக்கிஸ்தானின் சரிவடைந்த அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளதுடன், இறக்குமதிகளுக்கு நிதியளிக்கவும் பயன்பட்டுள்ளது.
இதுவரை உலக அளவில் ஏற்றுமதியாகும் அரிசியில் சுமார் 40 சதவிகிதம் இந்தியா முன்னெடுத்து வந்த நிலையில், அதிரடி நடவடிக்கையாக கடந்த ஆண்டு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ளது.
இதனால் அண்டை நாடான பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி 2023 மற்றும் 2024 நிதியாண்டில் 5 மில்லியன் மெட்ரிக் தொன்களாக அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது, கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் 3.7 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ள நிலையில் அது மேலும், 5.2 மில்லியன் மெட்ரிக் தொன்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் துறை சார்ந்த நிபுணர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
2023 மற்றும் 2024ல் பாகிஸ்தான் 9 முதல் 9.5 மில்லியன் மெட்ரிக் தொன் அளவுக்கு அரிசி உற்பத்தி செய்யலாம் என்று நம்பப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்னர் பெருவெள்ளம் காரணமாக அரிசி உற்பத்தி 5.5 மில்லியன் மெட்ரிக் தொன் அளவுக்கு சரிவடைந்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் 700,000 தொன் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 60 சதவிகிதம் அதிகரித்து 950,000 தொன்களாக உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை அரிசி 36 சதவிகிதம் அதிகரித்து 4.25 மில்லியன் மெட்ரிக் தொன் என அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர், அரிசி ஏற்றுமதியூடாக 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக வருமானத்தை பாகிஸ்தான் ஈட்டும் என்றும் நம்பப்படுகிறது.
காலாகாலமாக பாகிஸ்தானை விட குறைந்த விலையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்து வந்துள்ள நிலையில் இந்தியா தனது சந்தையை இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.