தமிழகத்தில் பிரபலமான அரசியல் வாதிகளில் ஒருவர் சீமான். இவர் 1996ல் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் இனியவளே எனும் திரைப்படத்தை இயக்கினார்.
தொடர்ந்து வீரநடை, தம்பி மற்றும் வாழ்த்துக்கள் ஆகிய படங்களை இயக்கி திரையுலகில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரானார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வந்த சீமான், எவனோ ஒருவன், பொறி, மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுநேர அரசியல் வாதியான பின், இரண்டு வருடத்திற்கு ஒரு படம், அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வந்தார் சீமான். கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த முந்திரிக்காடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் LIC படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் தந்தை கதாபாத்திரத்தில் சீமான் நடித்து வருகிறாராம். அதற்காக தான் தாடி கூட வளர்த்து வருகிறாராம்.
மேலும் இப்படத்தில் இயற்க்கை விவசாயம் செய்யும் ஒரு நபராக தான் நடிக்கிறாராம். அதே போல் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் செயற்கை விவசாயத்தை விரும்பும் நபராம். ஆகையால் இவர்கள் இருவருக்கும் இடையே வரும் காட்சிகள் சுவராஸ்யமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் 7 ஸ்க்ரீன் லலித் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.