இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் இலங்கையிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார்.
மாகாத்மா காந்தியின், நினைவு தினத்தையொட்டி கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாள் சோக மயமான நாள், 76 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 30 ஆம் நாள் இந்தியாவே கண்ணீர் கடலில் மிதந்த நாள், தேசப் பிதா உத்தமர் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்.” என்றார்.
மேலும், இந்திய ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என்று இந்துத்துவா சக்திகள் சொல்கின்றன, அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்இ இந்தியாவின் ஜனநாயகம் அழிந்துவிடும் எனத் தெரிவித்தார்.
தவிரவும், தமிழக கடற்தொழிலாளர்கள், இலங்கைக் கடற்படையினரால் நாள்தோறும் தாக்கப்படுகின்றனர்,
அவர்களைப் படகுகளோடு கைது செய்து இலங்கை அரசு சிறையில் அடைக்கிறது, அவர்களது உயிருக்கும் அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளது, இதுவரை ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இப்பொழுது மற்றொரு ஆபத்தும் நம்மைச் சுற்றி வளைத்துள்ளது, சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிலைகொண்டுள்ளது, இதனால் சீனாவிடமிருந்து நமக்கு ஆபத்து முதலில் தெற்கில் இருந்துதான் வரும்.
எனவே அரசு இந்த ஆபத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.