மரக்கறிகளின் விலைக்கு ஏற்றவாறு நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் கடந்த சில நாட்களாகவே அனைத்து பொருளாதார நிலையங்களிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றது.
இருந்தும் தற்போது வரி அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள போதிலும் பழங்கள் விலையில் பெரிய அளவில் அதிகரிக்காமல் காணப்பட்டது.
இருந்த போதிலும், கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் , இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதனாலும் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் படி, நெல்லி ஒரு கிலோ 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 2500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
மேலும், ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதுடன் அப்பிள், தோடம்பழம் உள்ளிட்ட ஏனைய பழங்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மேலும், பழங்களின் விலை உயர்வால் பழங்களின் விற்பனை குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.