ஜெயலலிதாவின் மருத்துவமனை விவகாரம், இப்போது உட்கட்சி விவகாரத்தால் பொதுவெளியில் அம்பலமாகி வருகிறது.
இதைப் பற்றி நிகழ்வுகள் நடந்த போதே பிடிவிடாமல் விரட்டிவிரட்டி செய்திகளை வழங்கி வந்த இந்திய ஊடகம் இப்போதும் ஜெயலலிதாவின் அப்பல்லோ இறுதி வாசத்தில் தொடர்புடைய அதிகாரிகளிடம் விவரங்களைத் திரட்டியுள்ளது.
அந்த விவரம் வருமாறு:
அம்புலன்சில் கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவை, பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் ரெட்டி தான் அனுமதிக்கிறார்.
அப்போது, “பாத்ரூமில் விழுந்து விட்டார். அவர் மயக்க நிலையில் இருந்தார்’ என சேர்க்கைக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரணம் நேரிட்டால், பிரேத பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் எம்.எல்.சி. பதிவு செய்யவில்லை.
சேர்க்கப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தவருக்கு, 15 நாட்களுக்குப் பிறகே சி.டி.ஸ்கேன் எடுத்துள்ளனர்.
லண்டனிலிருந்து வந்த டாக்டர் ரிச்சர்ட் முதல் தடவை வந்த போது, முதலமைச்சரை சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகத்திடமும் சசிகலாவிடமும் சொல்ல, அழுத்தமாக மறுத்து விட்டார் சசிகலா.
ஜெய லலிதாவிடமும் இதை டாக்டர் ரிச்சர்ட் சொன்ன போது, அவர் அதை மறுக்கவில்லை. ஆனால், சசிகலாவை மீறி எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல்தான் அங்கு நிலவியது.
நவம்பர் மாதத்தில் ஜெயலலிதாவின் உடல் நல முன்னேற்றத்தை பார்க்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் விரும்பிய போது, அனுமதி கொடுக்கப்படவில்லை.
அது போல ரிச்சர்டின் வருகைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவையனைத்துமே சசிகலாவின் உத்தரவுதான்.
டிசம்பர் 3-ந்தேதி வந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் டாண்டன், ஜெயலலிதாவைச் சந்திக்க அவரது அறைக்கு சென்ற போது, சசிகலாவும் டாக்டர் சிவக்குமாரும் தடுத்திருக்கிறார்கள்.
அப்போது அங்கு வந்த தலைமைச்செயலாளர் ராமமோகனராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்பல்லோ பிரதாப்ரெட்டி ஆகியோரிடம், முட்டாள் தனமாக அந்த லேடி (சசிகலா) நடந்துக்கிறாங்க. அவங்க வேலையை மட்டும் பார்க்கச் சொல்லுங்க’ என கோபத்துடன் கூறியிருக்கிறார் டாண்டன்.
தடுக்கப்பட்டதையும் மீறி, ஜெயலலிதாவின் முன்னேற்றத்தை பார்வையிட்ட டாண்டன், தினமும் ஒரே முகத்தையே நீங்கள் பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், மாற்று கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் நீங்கள் பார்க்க வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்.
அதற்கு தலையை அசைத்துள்ளார், ஜெயலலிதா.
இதை சசிகலாவிடம் டாக்டர் சிவக்குமார் மொழி பெயர்த்து சொல்ல, டாண்டன் சென்ற பிறகு அதிகாரிகளையும் அப்பல்லோ நிர்வாகத்தை யும் விளாசியிருக்கிறார் சசிகலா.
ஜெயலலிதாவால் ஆக்டிவ்வாக செயல்பட முடியாது என்ற நிலையில், அதிகாரங்கள் பலவற்றையும் வலியுறுத்தி சசிகலா விவாதம் செய்ய, தனது முக பாவனைகளால் எதிர்ப்பை காட்டியிருக்கிறார் ஜெயலலிதா.
இதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 4-ந்தேதி மாலை கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட, டாக்டர் ரமேஷ் ஓடோடி வந்து இறுதிக்கட்ட முயற்சிகளை மேற் கொண்டு பார்த்தார்.
ஆபரேஷன் தியேட்டருக்கு ஜெயலலிதாவைக் கொண்டு போன போது, “குட்டிப் பையா ஏந்திரி, குட்டிப் பையா ஏந்திரி’ என ஜெயலலிதாவின் உடலை உலுக்கியபடியே சசிகலா சத்தமிட்டதை அப்போதே வெளிப்படுத்தியிருந்தோம் என்று விவரித்தனர்.
ஜெயலலிதாவின் முகப்புள்ளிகளும் கைரேகையும் – சம்பந்தப்பட்டவர்களின் பதில்கள்
பன்னீர்செல்வத்துக்கு முன்னால் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்த பின்னர், அஞ்சலிக்கு வைக்கப்பட்ட இடத்தில் திடீரென அவரின் கன்னத்தில் 4 புள்ளிகளைப் போன்ற ஓட்டைகள் இருந்தன.
அது பற்றி கேள்விகள் எழுந்ததற்கு, பிளாஸ்டர் ஒட்டப்பட்டு அதனால் ‘ஸ்கின் பீலிங்’ ஏற்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.
ஆனால் எம்பாமிங் செய்த மருத்துவரோ அதை நான் பார்க்கவே இல்லை என்றார்.
மீண்டும் இது குறித்து அதிமுகவுக்கு உள்ளேயே பரஸ்பர குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பிரபல தடயவியல் வல்லுநர் டாக்டர் சந்திரசேகரனிடம் பேசினோம்.
அவர், ஒருவருக்கு எம்பாமிங் செய்வதற்கு முன் எக்ஸாமினிங் அதாவது உள் – வெளிக்காயங்கள் இருக்கின்றனவா என்று முழு உடலையும் பரிசோதித்து விடுவதுதான் வழக்கம்.
அதுவும், ஊர் உலகத்திற்கே தெரிவதுபோல் ஜெயலலிதாவின் கன்னத்தி லேயே இருக்கும் ஓட்டையை கவனிக்கவில்லை என்றும் அதற்கான காரணத்தைக் கூற மறுப்பதும் மழுப்பல்.
அதேநேரத்தில், எம்பாமிங்கிற்கான ஓட்டை அதுவல்ல என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
மேலும், நள்ளிரவில் போன் வந்தது 15 நிமிடத்தில் எம்பாமிங் செய்து விட்டோம் என்பதை மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.
நிச்சயமாக இரண்டு மணியிலிருந்து மூன்று மணிநேரம் ஆகலாம். அதுவும், எம்பாமிங்கை டாக்டர் குழுவோடுதான் செய்திருப்பார்கள்.
அப்படியென்றால், மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்தால் மட்டுமே உடனடியாக சென்று எம்பாமிங்கை ஆரம்பித்திருக்க முடியும் என்று நம்மிடம் கூறினார்.
ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யனிடம் கேட்டபோது, 33 வருடங்களாக இத்துறையில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.
பம்பிங் முறையில் செய்தால் 15 நிமிடத் தில் தாராளமாக எம்பாமிங் செய்துவிட முடியும். மேலும், இதுகுறித்து அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் பேச இயலாது என்று சொல்லிவிட்டார்.
தேர்தல்கள் வந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கைவிரலையெடுத்து கைநாட்டு வைக்கப்பட்டுள்ளது.
அப்போது, அங்கு இருந்த பாலாஜி விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மேற்கொண்டு ஜெயலலிதாவின் கைவிரலைக் கொண்டு என்னென்ன விஷயத்துக்காக கைநாட்டுகள் வாங்கப்பட்டன என்று தெரியும்-
இது அதிமுகவின் முக்கிய பிரமுகர் பி.எச்.பாண்டியன் தரப்பு குற்றச்சாட்டு.
டாக்டர் பாலாஜியை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, குற்றச்சாட்டுகளை மறுத்தவர், இடைத்தேர்தலுக்கான கைரேகையைத் தவிர வேறு எதற்கும் கைரேகை வைக்கப்படவில்லை என்றார்.
அப்பல்லோ மருத்துவமனையின் ஊடகத் தொடர்பாளரும் டி.எம்.எஸ்.ஸுமான டாக்டர் சத்யபாமாவைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர், இணைப்புக்கு வரவில்லை.
என்னவோ, மர்மம்!?