“இலங்கை தற்போது செல்லும் பாதை சரியானது என முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், இந்தப் பாதையில் தொடர்ந்து சென்று செழிப்பை மீண்டும் பெற சுதந்திர தினத்தன்று தீர்மானம் எடுக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாம் கடினமான எல்லைகளைக் கடந்து வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் பிரதம அதிதி
அத்துடன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணிப்பது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் தாய்லாந்து பிரதமர் ஷ்ரேத்தா தவிசின் சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இது தவிர, தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதுடன், தூதுவர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.
விசேட போக்குவரத்து திட்டங்கள்
இராணுவம், விமானப்படை, கடற்படை, காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய கெடட் படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக 19 விமானங்களும் விமானப்படையின் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளும் அணிவகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.
அதேநேரம் 76ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 05.00 மணி முதல் காலை 9.00 மணி வரை கரையோர மார்க்கத்தில் பொதுச் செயலாளர், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய தொடருந்து நிலையங்களில் தொடருந்துகள் நிறுத்தப்படாமல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.