மொட்டுக் கட்சியின் ஆட்சியில் இடம்பெற்ற அனைத்து விதமான மக்கள் விரோத செயற்பாடுகளுக்கும் கோட்டாபய தான் காரணம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்ச மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஆகியோர் நேற்று(03) அநுராதபுரம் அடமஸ்தானய பிரதம தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரரை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.
அதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் மொட்டுக் கட்சிக்கு ஹேமரத்ன தேரரின் ஆதரவை பெற்றுக்கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.
ஆனால், கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட இரசாயன பசளைத் தடை போன்ற மக்கள் விரோத தீர்மானங்கள் தொடர்பில் ஹேமரத்ன தேரர் கடும் காட்டமான தொனியில் விமர்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு, அதுபோன்ற தீர்மானங்கள் காரணமாக வடமத்திய மாகாண விவசாயிகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், மொட்டுக் கட்சியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன பசளைத் தடை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்தும் கோட்டாபயவின் தனித் தீர்மானத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவற்றுக்கும் மொட்டுக் கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், ஹேமரத்ன தேரர் கடுமையான தொனியில் கருத்து வெளியிட்ட நிலையில் நாமல் மற்றும் ரஞ்சித் உள்ளிட்டோர் பாரிய ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.