நாட்டில் சுமார் 70 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியாது அல்லல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆடம்பரமாக கொண்டாடப்பட்டதினை கண்டிக்கும் வகையில் அவர் முகநூலில் பதிவொன்றினையிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு,
76 ஆவது சுதந்திர தினம் எங்களுக்கு உண்மையான சுதந்திரமா? நாட்டில் 70 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தமது மூன்று வேளை சாப்பாட்டைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது அல்லல்படுகின்றனர்.
சுதந்திர தினத்தில் வானத்தில் குத்துக்கரணம் அடிப்பதனால் மக்களின் பசியை போக்கிவிட முடியாது. அதன் மூலம் நாம் சுதந்திரத்தினை மறந்துவிட வேண்டும் என்று கூறவில்லை. மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் தேடிக்கொண்ட பணத்தினை வெறும் வேடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றே நான் குறிப்பிடுகின்றேன்.
எவ்வித ஆட்டமும் பாட்டமும் இன்றி அழகாக இதனை கொண்டாட முடியும். இவ்வாறு பணத்தினை வீணடிக்கும் சுதந்திர தினத்தினை நான் புறக்கணிக்கின்றேன் என கலாநிதி ஹர்ஷ டி சில்வா முகநூலில் பதிவிட்டுள்ளார்.