சீனாவின் உளவு கப்பலான Xiang Yang Hong 3 மாலைதீவுக்கு சென்ற நிலையிலேயே இந்தியா தனது அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான INS Karanj ஐ இலங்கைக்கு அனுப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவை உளவு பார்ப்பதற்காக இலங்கைக்கு சீனா ‘ஆராய்ச்சி கப்பல்களை’ அனுப்புவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. எனினும் சீனாவின் இத்தகைய செயற்பாடுகளுக்கு இலங்கை அரசு, இந்தியாவின் எதிர்ப்பை மீறி அனுமதிகளை வழங்கி வருகிறது.
இந்த சூழலில், இலங்கையைத் தொடர்ந்து மாலைதீவும் இந்தியாவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
மாலைதீவின் புதிய அதிபரான முய்சு, இந்தியா எதிர்ப்பு நிலையை தீவிரமாக கடைபிடித்து வருவதோடு சீனாவின் செயற்பாடுகளுக்கு ஆதரவுகளையும் வழங்கி வருகிறார்.
அண்மையில் சீனா தனது உளவு கப்பலான Xiang Yang Hong 3 கப்பலை மாலைதீவின் மாலே துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், இந்த அதிநவீன Xiang Yang Hong3 உளவு கப்பல் மூலம் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே சீனா அனுப்பி வைத்ததாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் தமது அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான INS Karanj -ஐ இலங்கை தலைநகர் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்த குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது இன்று 5 ஆம் திகதி வரை வரை அங்கு முகாமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.