இந்து சமுத்திர மாநாட்டில் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் தலைநகர் பேர்த்தில் இம்மாதம் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் அதிபர் முக்கிய உரையாற்றுவார் என அதிபர் அலுவலக சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர் தனது விஜயத்தின் போது அவுஸ்ரேலிய பிரதமரையும், அவுஸ்ரேலியாவின் வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், அவுஸ்ரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை, சிங்கப்பூர் எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கற்கைகள் கல்லூரி மற்றும் பேர்த் யுஎஸ்ஏசியா மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ளது.
“ஒரு நிலையான மற்றும் நின்று நிலைத்திருக்கக் கூடிய இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற கருப்பொருளுடன், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வரைபடத்தை பட்டியலிடுவதற்கு முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் வகையில் இம்மாநாடு இடம்பெறும்.
இந்து சமுத்திர மாநாடானது 2016ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், மூலோபாய சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த 300இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் அறிமுகமான வருடாந்த நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.