அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப் பிரகடன உரையை முன்வைத்துக்கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சி தலைவரும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் நேற்றையதினம் (07) அதிபரின் கொள்கைப் பிரகடன உரையுடன் ஆரம்பமானது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் சபையிலிருந்து வெளியேறினர்.
இவர்கள் வெளியேறும் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப் பிரகடனத்தை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்ததுடன் பிரதியமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்கவின் உரையை அவதானித்துக் கொண்டிருந்தனர்.
வெளியேறியதை அவதானித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரத்த குரலில் ‘உட்கார்ந்து கேளுங்கள்’ என கூறினார். இதன்போது, சாமர சம்பத் தசநாயக்கவை அமைதியாக இருக்குமாறு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்றம் இன்று(8) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.