ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையின் நகல் வரைவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரேரணை தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உப குழுக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ள நிலையில், மேற்படி கூட்டத்தின் போது இது தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி அமெரிக்காவின் உப குழுக் கூட்டம் குழு அறை 24இலும், பிரான்ஸின் கூட்டம் குழு அறை 24இலும் நடைபெறவுள்ளது.
இலங்கையில் நல்லிணக்க பொறிமுறையை மேலும் முன்னேற்றும் வகையில் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, கால அவகாசம் வழங்குவது தொடர்பான பிரேரணையை பிரித்தானியா கொண்டுவரவுள்ளது.
இதற்கு அமெரிக்காவும் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தருணத்திலேயே குறித்த உப குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.