நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்று மனித உரிமை பேரவை ஆணையாளர் செயித் அல் ஹீசைனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 2015 ஆண்டு தீர்மானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைய வில்லை என்றும் குறிப்பாக, நிலைமாறு கால நீதிப்பொறி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான பொறுப்புக் கூறல் செயற்பாடு மந்தகதியலேயே இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சி மற்றும் காணிகள் விடுவிப்பு போன்றவை சாதமான அறிகுறிகள் என்று தெரிவித்துள்ள, மனித உரிமைகள் ஆiணாயாளர் தற்போதுள்ள சூழலை பயன்படுத்தி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இருப்பதாகவும் போர்க் குற்ற விசாரணகைள் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றத்தினால் நடத்தப்பட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நிலைமாறு காலப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தில் இலங்கையின் அரசியல் சூழல் தாக்கம் செலுத்துவதாவும் தெரிவித்துள்ள அதேவேளை, அரசாங்க தரப்பினரே ஒன்றுக்கு ஒன்று – ஒருவருக்கு ஒருவர் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசாங்த்திற்கு அழுத்தத்தினை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், பொறுப்புக் கூறல் மற்றம் கலப்பு நீதிமன்றம் போன்ற விடயங்களில் இலங்கை தப்பிக்க முடியாத சூழல் ஒன்று உருவாகி வருகின்றது என்ற கருத்து மக்கள் மத்தியில் எற்படக் கூடும் அல்லது சில நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் சில தரப்புக்களினால் ஏற்படுத்தக் கூடும்.
ஆனால் இவ்வாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது மக்களை தவறான திசையில் தள்ளி விடுவதுடன் காலப் போக்கில் ஏமாற்றங்களை மட்டுமே அறுவடை செய்து கொடுக்கும் என்பதற்கு அண்மைய வரலாற்றில் எத்தனையே சாட்சியங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன.
எனவே, உணர்வுகளைவிட அறிவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ் சமூகம், வெளியாகின்ற அறிக்கைகளையும் – செய்திகளையும் நிதானமுடன் கிரகித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.
அந்ந வகையிலே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள், சர்வதேசத்தின் பலம் பொருந்திய அமைப்பு ஒன்றின் பிரதான உப அமைப்புகளில் ஒன்றிற்கு பொறுப்பாக இருக்கின்ற ஒருவரின் அவதானிப்புக்களின் அடிப்படையிலான வெளிப்பாடு என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
இலங்கையில் நடைபெறுகின்ற உண்மை நிலவங்களையும் உண்மையான நகர்வுகளையும் நம்மவர் ஒருவர் எடுத்துச் சொல்லும்போது இருக்கின்ற பெறுமதியைவிட, மனித உரிமை ஆணையாளரின் கருத்தாக வெளிவருகின்றபோது அதன் பெறுமதி அதிகமாகத்தான் இருக்கும்.
இலங்கை பற்றி அறிந்திருக்காத அறிய வேண்டிய தேவை இல்லதாத நாடுகளுக்கும் இலங்கை என்று ஒரு நாடு இருக்கின்றது. அங்கே சிறுபான்மையினரான தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளகின்றார்கள் என்ற செய்தியை மனித உரிமை ஆணையாளர் போன்றோரின் கருத்துக்கள் அறிய வைக்கும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைதான்.
ஆனால், இவ்வாறான அறிக்கைகளினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்த முடியும், அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரிச்சினைகளுக்கு எவ்வாறான நன்மை பயக்கும் என்பதுதான் ஈழத் தமிழ் மக்களை பொறுத்த வரையில் முக்கியமான கேள்வியாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் குறித்த கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க்பட்டுள்ள அறிக்கையில் தற்போது இலங்கையில் நடைபெறுகின்ற பல விடயங்கள் மற்றும் உண்மை நிலவரங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
அரசியல் அமைப்பு உருவாக்கம், காணி விடுவிப்பு, காணாமல் போனோர் விடயம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் திருப்தி கொள்ளாவிட்டாலும் பெயரளவிலேனும் நகர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சுமந்திரனின் பாணியில் சொல்லதானால், ‘எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. ஏதோவொன்று நடக்கிறது’
அரசியல் அழுத்தங்கள் ஏதுமின்றி உள்நாட்டு நீதிபொறி முறை செயற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன. ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினரையே கைது செய்து வைத்துள்ளார்கள்!.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமனின் கொலை வழங்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது!! அரசாங்கத்தை விமர்சித்த ரவிராஜின் வழக்குகூட பத்து வருடங்களுக்கு பின்னர் தூசு தட்டப்பட்டு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது – சட்டம் தன் கடமையை செய்துள்ளது!!! – இப்படி பல விடயங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன – மறுப்பதற்கில்லை.
ஆக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்படள்ள விடயங்கள் முக்கியமானவை, அவரின் ஆலோசனைகளும் பெறுமதியானவை. ஆனால் அவை தமிழ் மக்கள் எதிர்பார்கின்றன – தமிழ் மக்களுக்கு சிலரால் சொல்லப்படுகின்றது போன்று இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தமாக அமையுமா?
ஜெனீவா கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் என்னதான் தன்னுடைய அவதானிப்புக்களையும் கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்தாலும் தீர்மானிக்கும் அதிகாரம் அவரிடம் கிடையாது. அவர் வெறும் அறிக்கையாளர் மட்டுமே.
அப்படி ஆணையாளரினால் சுயமாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இலங்கைக்கு அழுத்தங் கொடுக்க முடியும் என்றால் நவநிதம்பிள்ளை அம்மையாரின் காலத்தில் நடந்திருக்குமே!
அப்போதைய அரசாங்கத்தின் முறைச்சலான செயற்பாடுகளும், நவி அம்மையாரின் தமிழ் மக்களுடனான பூர்வீக உறவு சம்மந்தப்பட்ட உணர்வுகளும் இலகுவாக இலங்கைக்கு எதிரான அழுத்தமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும்.
எனவே, ஆணையாளர் என்பவர் அறிக்கை சமர்ப்பிக்கலாம் கருத்துக்களை கூறலாம். ஆனால் தீர்மானங்களை நிறைவேற்றுவது அங்கத்துவ நாடுகளின் கைகளிலலேயே தங்கியுள்ளது. அதுவும் பலம்பொருந்திய நாடுகள் எதை விரும்புகி;ன்றனவோ – அவற்றின் நலன்களுக்கு என்ன தேவையோ, அவைதான் தீர்மானங்கள்!
அந்த அடிப்படையில்தான், இலங்கை தொடர்பான தீர்மானங்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்க வேண்டும்.
தற்போதைய நிலையில், சீனாவுடன் நட்புப் பாராட்டினாலும் அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் அவை சார்ந்த நாடுகளையும் முறைக்காத – அவர்களுக்கு விருப்பமான ஆட்சி இலங்கையிலே நடக்கின்றது. இதுவே, தொடர வேண்டும் என்பதுதான் மனித உரிமை பேரவையில் சக்திமிக்கவர்களின் விருப்பம்.
அந்த ஆட்சி இலங்கையிலே தொடர்வதற்கு சவாலாக இருக்கின்றது மஹிந்த தரப்பு. இந்நிலையில் தமிழ் மக்கள் விருப்பமான வகையில் ஜெனீவாவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமாக இருந்தால் மஹிந்த தரப்பிற்கு வாய்ப்பாக மாறி விடும். அதைகூறியே சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த தரப்பு விஸ்வரூபம் பெற்று விடும்.
ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் சிங்கள மக்கள் மத்தியில் தங்களை முதுகெலும்பு உள்ளவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளத்தக்க வகையில் ஜெனீவா கூட்டத் தொடரின் முடிவுகள் அமைய வேண்டும்.
அதேவேளை, ஓருவேளை பலம்பொருந்திய நாடுகள் எதிர்பாராத நிகழ்வுகள் இலங்கையில் இடம்பெற்று மீண்டும் மஹிந்தவின் கை மேலோங்கினால், அவ்வாறான சூழலை கையாளத்தக்க வகையில், போர்க்குற்ற விசாரணைகளும் நிலைமாறு கால நீதிப் பொறி முறையும் உயிர்ப்புடன் இருக்கவும் வேண்டும். இதுதான் தற்போதைய நிலவரம்.
ஆக, மார்ச் 23 ஆம் திகதி ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானத்தில், நல்லாட்சி அரசாங்கம் விரும்புகின்ற இரண்டு வருட கால அவகாசத்தை அமெரிக்க பெற்றுக் கொடுக்கப் போகின்றது. வேண்டுமானால் ஒரு சில வார்த்தைகள் கடுமையானவையாக இருக்ககூடும். அவ்வளவுதான்…!
எனவே, ஜெனீவாவில் கயிறு இறுகுகிறது சிங்களவன் தொலைஞ்சான் என்று வாய் சவடல் விட்டுக் கொண்டிருக்காமல், உலகப் போக்குகளையும் சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களையும் எவ்வாறு எங்கள் அபிலாசைகளுக்காக பயன்படுத்தப் போகின்றோம் என்பதுபற்றி தமிழ் மக்கள் அறிவு சார்ந்து சிந்திக்க வேண்டும்.