நல்லூர் அரசடி ஊடாக 2006-10-25 அன்று வீதியால் சென்ற எனது மகனை இராணுவத்தினர் கைது செய்த பின்னர் 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வெளிவந்த கொழும்புத் தினசரி பத்திரிகையில் கண்டேன். ஆனால் தற்போது தெரியாது எனக் கைவிரிக்கின்றனர் என தாயாரான அருணகிரிநாதன் ஜெயகலா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் யாழிற்கு வந்த ஜனாதிபதியிடம் தமது குறையைக்கூறி பிள்ளைகள் தொடர்பான தகவலைக் கேட்டறியும் நோக்கில் ஒன்று கூடியிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நல்லூர் அரசடி ஊடாக கடந்த 2006-10-25ம் திகதி அன்று வீதியால் சென்ற எனது மகனை அரசடிப்பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றனர். அவ்வாறு கொண்டு சென்ற மகனுக்கு அப்போது 22 வயது . இவ்வாறு கைது செய்யப்பட்ட எனது மகன் தொடர்பில் பல இடங்களிற்கும் முறையிட்டதோடு நானும் தினமும் தேடி அலைந்தேன் இருப்பினும் மகன் விடுவிக்கப்படவில்லை. அது மட்டுமன்றி மகன் இருக்கும் இடத்தைக்கூட படையினர் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு நான் எனது மகனைத் தேடித் திரிந்த காலத்தில் 2007ம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் கொழும்பில் இருந்து வெளிவரும் தினசரி பத்திரிகையில்வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது அமைச்சராக இருப்பவருமான கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் சென்று கைதிகளுடன் உரையாடுகின்றார். அதன்போது சில கைதிகள் உரையாடும் படம் மிகத் தெளிவாக கலர்ப் படமாக பத்திரிகையின் முகப்பில் போடப்பட்டிருந்தது.
அவ்வாறு போடப்பட்டிருக்கும் படத்தில் உள்ள ஒரு சிலரில் எனது மகன் நிற்பதனை நான் கண்டேன் . அதனை ஆதாரமாக வைத்தும் பல இடங்களையும் தொடர்பு கொண்டேன். அது மட்டுமன்றி நானும் நேரில் தேடி அலைந்தும் இன்றுவரைக்கும் எனது மகனைக் காட்டவும் இல்லை விடுவிக்கவும் இல்லை. இவ்வாறு சிறையில் இருந்த மகன் தொடர்பில் பொறுப்பற்ற விதமாக எதுவுமே தெரியாது என்கின்றனர். அவ்வாறானால் சிறைச்சாலைகளில் பேணப்பட்டு வந்த பதிவேடுகள் எல்லாம் மோசடி செய்யப்பட்டு விட்டதா? எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
எனவே சோதனைச் சாவடியில் வைத்து கடத்தப்பட்டு பூசா தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரம் உள்ள எனது மகனான அரிணகிரிநாதன்- சுதன் தொடர்பில் இந்த அரசு பதில் கூறவேண்டும். அன்று சிறை சென்று பார்வையிட்ட தற்போதைய கல்வி இராஜாங்க அமைச்சரான இராதகிருஸ்ணனும் இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டும் என்றார்.