விடுதலைப் புலிகளின் ஏவுகணை பிரிவின் முக்கிய உறுப்பினர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலம் சட்ட ரீதியானது என கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி ரோமா சுவர்ணாதிபதி அறிவித்துள்ளார்.
கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி ரோமா சுவர்ணாதிபதி அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த அன்டனோவ் 32 ரக விமானம் மீது வில்பத்து வனத்தில் இருந்து விடுதலைப் புலிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த புலிகளின் ஏவுகணை பிரிவின் முக்கிய உறுப்பினர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்த வாக்குமூலம் சட்டரீதியானதா என்பதை தீர்மானிப்பதற்காக அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் நடந்த நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியள்ளார்.
சம்பவம் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புலிகளின் ஏவுகணைப் பிரிவின் இரண்டு முக்கிய உறுப்பினர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2000ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகி தலாவ, வீரவெவ பிரதேசத்தில் விழுந்த அன்டனோவ் விமானத்தில் பயணித்த ரஷ்ய விமானி உட்பட 32 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.