நாட்டில் சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிபுறக்கணிப்பு இன்று (15) காலை 6.30 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை (19) கலந்துரையாடப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன அறிவித்ததை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT எனப்படும் மேலதிக கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் (13) காலை 6 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தன.
இதேவேளை, சுகாதாரத்துடன் தொடர்புடைய சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிபரின் பணிப்புரைக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
வைத்தியசாலை சேவைகளை இடையூறுகள் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக 1,400இற்கும் அதிகமான இராணுவத்தினரை களமிறக்கியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்திருந்தார்.