நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இடை விலகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்களில் 53 வீதமானவர்களுக்கு பாடசாலை புத்தகப் பை ஒன்றை கொள்வனவு செய்யக்கூட முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது 43 இலட்சம் மாணவ, மாணவிகள் பாடசாலை செல்வதாகவும், அவர்களில் சுமார் 1,30,000 மாணவர்கள் இடை விலகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாடசாலை மாணவர்கள் இடை விலகுவது நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக அமையும் எனவும் அறிவார்ந்த இலங்கை சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு இடையூறாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் 28 லட்சம் மக்கள் நுண்கடன் திட்டத்தில் சிக்கி உள்ளதாகவும், நுண்கடன்களை செலுத்த முடியாத 200க்கும் மேற்பட்டவர்கள் அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடன் பொறியில் சிக்குபவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும் சுட்டிக்காட்டியுள்ளார்.