தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை எனவும், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை ஒத்திவைப்பது தவறு எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (22) தெரிவித்தார்.
களனி விகாரைக்கு வருகை தந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்
அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் எதிர்காலத்தில் நடைபெறவுள்ளதால், தேர்தலுக்குத் தயாராக வேண்டியது எந்தவொரு அரசியல் கட்சியினதும் பொறுப்பாகும் என்றும், அதிபர் தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஊடகங்கள் ஊடாக யார் என்ன ஆலோசனை கூறினாலும், அனைவரும் அரசியலமைப்பை நம்ப வேண்டும் எனவும், கடந்த காலங்களில் போராடி ரணில் விக்ரமசிங்கவை அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் தற்போதைய அதிபராக நியமித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.