இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டயனா கமகே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவு நேரங்களில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவில் உணவகங்களைத் திறந்து வைப்பது உள்ளிட்ட இரவு நேரப் பொருளாதாரத்தை நாடுவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியை சுமார் 70% அதிகரிக்க முடியும்.
உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரத்தின் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, நம் நாட்டு மக்களும் இரவு நேரங்களில் உணவகங்களுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவதையே விரும்புவது வழக்கம். இதன்மூலம் விசேடமாக மதுவரி வருமானத்தையும் அதிகரிக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கிறது.
ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும், அரச வருமானத்தை அதிகரிப்பது அவசியம். இரவு நேரப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
ஆனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும், கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
எனவே, இதுபோன்ற இடங்கள் தொடர்பான சட்ட, விதிமுறைகளை திருத்தம் செய்து, தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அவர்கள் இந்த நாட்டிற்கு வந்து பொழுதுபோக்கக்கூடிய வகையில் தற்போதுள்ள சில கட்டுப்பாடுகள் திருத்தப்பட வேண்டும். உதாரணமாக, உணவகங்கள் திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான ஒரு நெகிழ்வான கொள்கைக்கு நாம் செல்ல வேண்டும்.” என டயனா கமகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.