மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரல் ஆகும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு ஆகும்.
கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கிக் கொடுக்கின்றது. கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நம் உடலில் பல விஷயங்களைச் செய்கிறது.
அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரல் உதவுகிறது.
தற்காலத்தில் துரித உணவுகளை உட்கொள்ளும் அளவு அதிகரித்தமை மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம் ஆகியன காரணமாக கல்லீரல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயினால் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மக்களின் இறப்புக்களில் கல்லீரல் புற்றுநோய் முக்கிய காரணமாக இருக்கிறது.
கல்லீரல் புற்றுநோய் என்றால் என்ன?
கல்லீரல் புற்றுநோய் என்பது, கல்லீரல் செல்களில் உருவாகும் ஒரு விதமான அபரிமிதமான வளர்ச்சியாகும். இதில் பலவகையான புற்று நோய்கள் உருவாகலாம்.
மக்களுக்கு ஏற்படும் கல்லீரல் புற்றுநோயில் ‘ஹெபடோசெல்லுலர் கார்சினோமா’ என்பது மிகவும் பொதுவான வகையாகும்.
இந்த வகை புற்றுநோய் கல்லீரலின் உயிரணுவில் உருவாகிறது. கல்லீரலில் தொடங்கும் புற்றுநோயை விட மற்ற இடங்களில் இருந்து கல்லீரலுக்கு பரவும் புற்றுநோய் அதிகம் என சொல்லப்படுகிறது.
இப்படி மார்பகம், நுரையீரல், பெருங்குடல் என மற்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட்டு கல்லீரலுக்கு பரவினால், அதை மெட்டாஸ்டேட்டிக் புற்றுநோய் என அழைக்கின்றனர்.
அறிகுறிகள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் அறிகுறி இல்லாமலேயே பல ஆண்டுகள் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது பல தருணங்களில் அறியப்படாமலேயே இருக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் சில அறிகுறிகளை வைத்து கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முடியும்.
மேல் வயிறு வலி,வயிறு வீக்கம்,திடீர் எடை இழப்பு, பசி இல்லாமல் போவது,மஞ்சள் காமாலை,உடல் மஞ்சள் நிறமாக மாறுவது, எப்போதும் சோர்வாக இருப்பது, திடீரென உடல்நிலை சரியில்லாமல் போவது, போன்ற அறிகுறிகள் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
காரணம் கல்லீரல் புற்றுநோயை பொருத்தவரையில் வெளிப்படையான முதல் கட்ட அறிகுறிகள் ஏற்படாது.
கல்லீரல் புற்றுநோய் தீவிரம் அடைந்த பின்னரே இதன் அறிகுறிகள் வெளிப்படும் எனவே இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படாவிட்டால் உயிராபத்தை ஏற்படுத்தும்.