மும்பை டப்பாவாலாக்களைப் போலவே லண்டனில் டிபன் சர்வீஸ் (Tiffin Service) தொடங்கப்பட்டது குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் வேலை செய்பவர்களுக்கு தேவையான மதிய உணவை டப்பாவாலாக்கள் எடுத்து சென்று கொடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டப்பாவாலாக்கள் வேலை செய்கின்றனர்.
அதாவது வீடுகளில் சமைக்கப்பட்ட உணவை பணிபுரியும் இடங்களில் கொண்டு சேர்க்கும் வேலையை டப்பாவாலாக்கள் 100 ஆண்டுகளாக செய்கின்றனர்.
இந்நிலையில், மும்பை டப்பாவாலாக்களைப் போலவே லண்டனில் டிபன் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் லண்டனில் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்தியாவில் பயன்படுத்தும் எவர்சில்வர் டிபன் பாக்ஸ்களிலே உணவுகளை கொண்டு செல்கின்றனர். அவர்கள் கொண்டு செல்லப்படும் உணவு வகைகளில் இந்திய உணவு வகைகளான பன்னீர் சப்ஜி, காய்கறிகள், சாதம் ஆகியவை அடங்கியுள்ளன.
ஆனந்த் மஹிந்திரா பதிவு
லண்டன் டிபன் சர்வீஸ் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா, “பரவாயில்லையா , அல்லது அதிக சுவையா, தலைகீழ் காலனித்துவத்தின் ஆதாரம்’’ என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பயனர் ஒருவர் காலனித்துவமா அல்லது வியாபார உத்தியா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் கேள்விக்கு பதில் அளித்த ஆனந்த் மஹிந்திரா, “இது ஒரு சாதாரணமான பதிவு, சிரியுங்கள் , இன்று ஞாயிற்றுக்கிழமை” என்று கூறியுள்ளார்.