அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகை மிகவும் ஆபத்தான இடமாக மாற்றும் என்று நம்புகிற 7 அச்சுறுத்தல்களை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பட்டியலிட்டு எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவை திரட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கூட்டம் ஒன்றிலேயே ரிஷி சுனக் அந்த எச்சரிகையை விடுத்துள்ளார். பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக சதி செய்யும் சர்வாதிகார அரசுகள் தொடர்பில் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
மட்டுமின்றி அதிகரிக்கும் அணு ஆயுத ஆபத்து குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த சில வருடங்கள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கும், ஆனால் நம் நாடு இதுவரை அறிந்திராத வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தாம் உறுதியாக நம்புவதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டை அச்சுறுத்தும் ஆபத்து என்பது உண்மை என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக் அதன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கு ரஷ்யா, ஈரான், வடகொரியா மற்றும் சீனாவால் அச்சுறுத்தல் ஏற்படும் என்றே ரிஷி சுனக் நம்புகிறார்.
இந்த நாடுகளை சர்வாதிகார போக்குகொண்ட நாடுகள் என்றே அவர் குறிப்பிடுகிறார். இந்த நாடுகள் ஒருங்கிணைந்து நம்மையும் நமது மதிப்புகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த ஒன்றாக வேலை செய்வதாக எச்சரித்துள்ளார்.
மேலும் உலகமெங்கும் போர் சூழல் மிகுந்து காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், ஐரோப்பாவின் வாசல் வரை போர் நெருங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனை விளாடிமிர் புடின் வெற்றிகொள்வார் என்றால் அவரது அடுத்த இலக்கு நேட்டோ நாடுகள் என்றார்.
மேலும், தீவிரவாதிகளை பலப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ரிஷி சுனக், பாலஸ்தீன ஆதரவு ஊர்வலங்கள், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மட்டுமின்றி, விரோத சக்திகள் பிரித்தானியர்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக அமைப்பதாக குற்றம் சாட்டினார். தீவிரவாதிகளும் இந்த உலகளாவிய மோதல்களை பயன்படுத்தி நம்மை பிரிக்கின்றனர்.
நமது ஜனநாயக விழுமியங்களை மக்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். நமது தெருக்களிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் யூத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்புகின்றனர் என்றும் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
அத்துடன் ஸ்கொட்லாந்து தேசியவாதிகள் நமது ஐக்கிய இராச்சியத்தை துண்டாட முயற்சிக்கின்றனர் என்றும் ரிஷி சுனக் குற்றஞ்சாட்டியுள்ளார். 6வதாக AI மற்றும் புதிய தொழில்நுட்பத்தால் பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் எழலாம் என எஅச்சரித்துள்ளார்.
40 சதவிகித வேலை வாய்ப்பை AI மற்றும் புதிய தொழில்நுட்பத்தால் உலகம் இழக்க நேரிடும் என IMF தெரிவித்துள்ளதை ரிஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளார். 7வதாக, போர் சூழல் காரணமாக உலகம் முழுவதும் 100 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக்,
புலம்பெயர் மக்களை தமது சுய லாபத்திற்காக ரஷ்யா பயன்படுத்திக் கொள்வதாகவும், குற்றப் பின்னணி கொண்டக் குழுக்கள் ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டி புதிய வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள் எனவும்,
சட்டவிரோத புலம்பெயர் மக்கள் தொடர்பில் நாம் நடவடிக்கை எடுக்க தவறினால், அதனால் நமது நாட்டுக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி எனவும் எச்சரித்துள்ளார்.