அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த அறிக்கையை தமிழக அரசு நேற்று (6) வெளியிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், புகார்களும் கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று தமிழக அரசிடம் அறிக்கை அளித்தனர்.
நுரையீரல் மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் கில்னானி தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவக்குழு அளித்த இந்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அத்துடன் அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளுடன் தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பினையும் வெளியிட்டிருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளில், அவர்கள் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை முறைகள் மற்றும் ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
அப்பல்லோ டிஸ்சார்ஜ் அறிக்கையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ம் திகதி முதல் டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணம் அடையும் வரையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக செப்டம்பர் 22-ம் திகதி இரவு மூச்சுத்திணறல் காரணமாக ஜெயலலிதா மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைபாடு, நீரிழிவு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், டிசம்பர் 4-ம் திகதி காலை உணவுக்குப் பின்னர் ஜெயலலிதாவுக்கு வாந்தி ஏற்பட்டதாகவும், மாலையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் அதிகமானதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 5-ம் திகதி இதய செயலிழப்பு ஏற்பட்டபோது அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் உடல்நிலை மேலும் மோசமடைந்து இரவு 11.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி நோயாளிகளின் விவரங்கள வெளியிடக்கூடாது என்றாலும், சிகிச்சை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையும், எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கையும் வெளியிடப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.