பொறுப்புக் கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறீலங்கா உறுதிசெய்யவேண்டுமென பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.
சிறீலங்கா தொடர்பாக ஐநாவில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரம் மற்றும் பக்கசார்பின்மையை உறுதிப்படுத்துவதற்கு, அனைத்துலகப் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், பொறுப்புக்கூறல் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்பை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐ.நா குழு சிறிலங்காவிடம் கோரியுள்ளது.
சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக தரநியமங்களுக்கு ஏற்ப, திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு கோரிக்கை விடுத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு தனியார் நிலங்கள் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பது, சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடுகள், பெரும் எண்ணிக்கையான பெண்களும் ஆண்களும் இடம்பெயர்ந்திருப்பது, தொடர்ந்தும் இடம்பெயர்ந்தோரின் 32 முகாம்கள் இயங்குவது என்பன கரிசனைக்குரிய விடயங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மீள்குடியமர்வுக்கு இராணுவமயமாக்கல், பெரும் தடையாக இருக்கிறது” என்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு தெரிவித்துள்ளது.