எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிறந்த பெண் என கூறி பரபரப்பை கிளப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரின் வாரிசு தாங்கள் தான் எனக் கூறிக்கொண்டு சசிகலா, ஓபிஎஸ், ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் அதிமுகவை கைப்பற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரே எனது பெற்றோர். இவ்வளவு நாட்களாக, சசிகலாவுக்கு பயந்தே தலைமறைவாக இருந்தேன்.
அவர் என்னைக் கொன்றுவிடுவேன் என்றெல்லாம் மிரட்டியுள்ளார். இனியும் பயப்படக்கூடாது என்பதற்காக, துணிந்து உண்மையை சொல்ல வந்துள்ளேன் என மகாலட்சுமி என்ற இளம்பெண் பேட்டியளிப்பது போன்ற வீடியோ ஒன்று டிவிட்டரில் நேற்று வைரலாக பரவியது.
இந்நிலையில் பேட்டி அளித்த அந்த இளம்பெண் கடந்த பல மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக் கொண்டு பலரிடமும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவர் அளித்த பேட்டிதான் தற்போது டிவிட்டரில் வைரலாக பரவி வருவதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.