இலங்கையில் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) சேவையை செயல்படுத்துவது தொடர்பான மேலதிக விவாதங்களுக்காக இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அடுத்த வாரம் கூடும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaga Herath) தெரிவித்துள்ளார்.
இதன்போது “ஸ்டார்லிங்கிற்கு வழங்கப்படும் உரிமத்தின் தன்மை குறித்து ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் ஆணைக்குழுவின் முடிவு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ‘ஸ்டார்லிங்க்’ வலையமைப்பை இலங்கையுடன் ஒருங்கிணைக்கும் முன்முயற்சி, குறிப்பாக கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் வைஃபை (Wifi) இணைப்பு சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பாரம்பரிய தொலைத்தொடர்பு வழங்குநர்களைப் போலல்லாமல், ஸ்டார்லிங்க் உலகளாவிய அளவில் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை, ‘ஸ்டார்லிங்க்’ சுமார் 02 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன் இது ஏழு கண்டங்களிலும் 60இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் கிடைக்கிறது.