தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைப்பதனை தொடர்ந்து, காய்கறிகளின் விலை விரைவாக வீழ்ச்சியடைவதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவான காய்கறி வகைகள் யாழ்ப்பாணத்திலிருந்து தற்போது தம்புள்ளை சந்தைக்கு கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நுவரெலியாவில் பயிரிடப்படும் கரட், லீக்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் ஆகிய காய்கறிகள் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பயிரிடப்படும் கத்திரிக்காய், பூசணிகாய், வெங்காயம், பாகற்காய் ஆகிய காய்கறிகளும் யாழிலிருந்து கிடைப்பதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று மாலை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கோவா ஒரு கிலோ 14 முதல் 20 ரூபாவினாலும், லீக்ஸ் ஒரு கிலோ 14 முதல் 20 ரூபாயிலும் கரட் ஒரு கிலோ 15 முதல் 30 ரூபாயிலும், நோக்கல், முள்ளங்கி ஆகியவைகள் 10 முதல் 20 ரூபாய் என்ற விலையின் கீழ் காணப்பட்ட போதிலும், விற்பனை செய்யப்படாது நிலை காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களுக்குள் யாழில் இருந்து பாரிய அளவு காய்கறிகள் தம்புள்ளைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.