பிரித்தானியா, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டில் தங்கவைக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருவது அனைவரும் அறிந்ததே. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதைக்கு அந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவுக்கு புலம்பெயரும் முயற்சியின்போது தங்கள் படகு பழுதடைந்ததால் பிரித்தானியாவுக்குச் சொந்தமாக தீவொன்றில் அடைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள் சிலர் ருவாண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியா, ருவாண்டாவை பாதுகாப்பான நாடு என்கிறது. ஆனால், அது ஒரு திறந்த சிறை, நாங்கள் தினமும் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்கிறோம் என்கிறார்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள். இவர்கள் பிரித்தானியாவில் புகலிடம் கோரியதால் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் அல்ல, இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.
இலங்கைத் தமிழர்கள் கூறும் திகிலூட்டும் செய்தி
கார்த்திக் (47), அவரது மகளான லக்ஷனி (Lakshani, 23), அழகு மற்றும் மயூர் (Mayur) என்னும் இந்த நான்கு பேரும் பிரித்தானியாவுக்கு சொந்தமான Diego Garcia என்னும் தீவிலிருந்து ருவாண்டாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
ஆனால், ருவாண்டாவில் தினமும் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழும் நிலைதான் காணப்படுகிறது என்கிறார்கள் அவர்கள். லக்ஷனியும் அவரது தந்தையும் தங்கியிருக்கும் வீட்டு ஜன்னலின் திரைச்சீலைகளைக் கூட அவர்கள் திறந்துவைப்பதில்லை.
அடிக்கடி, யாரோ அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றுகொண்டிருக்க, கதவை மூடிக்கொண்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கிக்கிடக்கிறார்கள், தந்தையும் மகளும். எப்போதாவது அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்றாலோ திகிலூட்டும் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒருநாள் தந்தையும் மகளும் வெளியே செல்லும்போது, ஒரு கூட்டம் ஆண்கள் இருவரையும் தனித்தனியே இழுத்துக்கொண்டுபோய், லக்ஷனியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். ஏற்கனவே பாலியல் தாக்குதலுக்குள்ளாகி அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர், திகிலில் வாழ்கிறார்.
லக்ஷனி மட்டுமல்ல, அழகு மற்றும் மயூரையும் சிலர் தவறான நோக்கத்துடன் அணுக, அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்கள்.
அதிகாரிகளிடம் முறையிட்டால், வெளியே சென்றால் பிரச்சினை ஏற்படும் என்று தெரிகிறதே, அப்பபடியானால் ஏன் வெளியே செல்கிறீர்கள் என்கிறார்களாம் சிலர். இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த தரப்பிலிருந்தும் சரியான பதிலளிக்கப்படவில்லை.
விடயம் என்னவென்றால், இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக Diego Garcia தீவிலிருந்து ருவாண்டாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இவர்கள் நிலையே இப்படி இருக்குமானால், பிரித்தானியா புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த திட்டம் வைத்திருக்கிறது, அப்படி நாடுகடத்தப்படுவோர் நிலைமை எப்படி இருக்குமோ தெரியாது!