மார்ச் மாதம் ஆனால் போதும், கார்த்திகை மாதத்தில் கறுப்புச் சட்டையும் மாலையும் அணிந்து கொண்டு சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் போல், கோர்ட்டும் சூட்டும் அணிந்து கொண்டு, கிளின் சேவ் எடுத்துக்கொண்டு ஜெனிவாவுக்கு கிளம்பி விடுவார்கள் சில புலம் பெயர் தமிழ் அமைப்பின் பிரதிநிதிகள்.
சாமியே சரணம் ஐயப்பா எனத் துதிபாடும் ஐயப்ப பக்தர்கள் போல் ஐ.நாவே நீதான் சரணமப்பா, சரணம் சரணம் ஐநா ப்பா எனக் கோஷமிட்டுக் கொண்டே ஐநா வை நோக்கி வலம் வருவார்கள் இவ்வமைப்பின் பிரதிநிதிகள்.
பின்னர் ஒரு மாதம் கழித்து அனைத்தும் அடங்கிய பின்னர் மறுபடியும் அடுத்த வருடம் அதே போல் ஜெனிவாவை நோக்கிய அவர்களது சபரிமலை பயணம் தொடரும்.
ஐநா வின் அரசியல் கொள்கைகளையும் அதன் கடந்த கால வரலாறுகளையும் நன்குணந்தவர்கள் ஐநாவின் பக்கம் சென்று தமது நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க மாட்டார்கள்.
அதற்குப் பதிலாக மக்களுடன் இணைந்து ஒரு மக்கள் அமைப்பைக் கட்டி எழுப்புவார்கள். அதன் பின் அவ்வமைப்பை ஐ.நா நோக்கியும், சர்வதேச சமூகம் நோக்கியும் திருப்புவார்கள்.
அம்முயற்சியே யுத்தம், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு காத்திரமான, நிரந்தர தீர்வைப் பெற்றுத் தரும்.
இவ்வாறாக பல்லின மக்களை ஒன்றிணைத்து, ஓர் அமைப்பாக கட்டுவதில், பிரித்தானியாவின் தமிழ் சொலிடிடாரிட்டி போன்ற அமைப்புகளே ஈடுபடுகின்றன.
ஐ,நா வில் உறுப்புரிமை வகிக்கும் நாடுகள் ஐ.நா சட்டத்தை மீறி, சர்வதேச சட்டத்தை மீறி யுத்தத்தில் ஈடுபடும் போது, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும்போது, இனப் படுகொலைகளை செய்யும் பொழுது தடுக்க வக்கில்லாத ஐநா,
தினந்தோறும் போர்க்களமாகவேயிருக்கும் காஸ்மீர், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் போடப்பட்ட தீர்மானங்களை முற்று முழுதாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க துப்பிலாத ஐ.நா, யுத்தத்தின் பின்னரான ஆய்வுகள், அறிக்கைகள், கூட்டத் தொடர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை முன்வைக்கப் போகின்றது என்பது நகைப்புக்கிடமானது.
எண்ணெய் வள நாடுகள் மீது கண் மூடித்தனமான தாக்குதலை, மனித உரிமை மீறல்களை அமெரிக்க அரசு உட்பட மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் போது, கண் மூடி வாய் பொத்தி மெளனியாக இருந்தமை ஐநா வின் செயற்படாத் தன்மையையே காட்டுகிறது.
இவ்வாறு முடமாக இருந்த ஐ.நாவே தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை முன்வைக்கப் போகின்றது என மக்களை நம்ப வைப்பது முட்டாளாக்கும் செயலே தவிர வேறொன்றுமில்லை.
இத்தகைய கறைபடிந்த வரலாற்றைக் கொண்ட ஐ.நா விடம்தான் நீதி கேட்டு, வருடம்தோறும் தமது பயணத்தை தொடர்கிறார்கள் நம் புலம் பெயர் அமைப்புகள்.
ஐநா என்பது மக்கள் நலன் சார்ந்து இயங்கும் ஒரு அமைப்பு அல்ல. அதன் உறுப்பு நாடுகளின் அரசியலையே தனது அரசியலாக கொண்டியங்கும் ஒரு அமைப்பு ஆகும்.
பாலஸ்தீன மக்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தராத, ஈராக் மீது அமெரிக்க அரசின் தாக்குதலை தடுக்க வக்கிலாத, கனன்று கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தராத ஐ.நா ஈழத் தமிழர்க்கு தீர்வைப் பெற்றுத் தரப் போகின்றது என்பது நகைப்புக்கிடமானது.
ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது மெளனமாக இருந்த ஐநா, இப்போது மக்கள் மீது கரிசனம் கொள்கிறது என்பது முரண் நகையாகத் தோன்றவில்லையா?.
அமெரிக்க அரசின் கொள்கையையே தனது கொள்கையாக கொண்டியங்கும் ஐ.நா இலங்கை தொடர்பாக தனது சுயநல அரசியல் பொருளாதார நலன் சார்ந்து அமெரிக்கா எடுக்கும் தீர்மானங்களையே ஆதரிக்கும்.
தனது அரசியல் பொருளாதார லாபங்களுக்கு ஏற்ற வகையில் அமெரிக்கா முன்வைக்கும் யோசனைகளையே ஐ.நா.வும் செயற்படுத்தும். இவ்வமைப்புகளுக்கு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் மீது கரிசனை என்பது கிஞ்சித்தும் கிடையாது.
இதை நம்பி வருடம் தோறும் ஜெனிவாவுக்கு பிரயாணம் செய்யும், தலைகீழாக நின்று லொபி செய்யும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் மக்கள் பற்றி கவலை கிஞ்சித்தும் கிடையாது என்றுதான் கருத வேண்டியுள்ளது.
மேலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட மனித உரிமை மீறல்களுக்கு நிரந்தரத்தீர்வு ஐ.நா மூலம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.
ஏனெனில் தற்போது இருக்கும் மைத்திரி- ரணில்- சந்திரிக்கா கூட்டணி அரசு என்பது அமெரிக்கா உருவாக்கிய ஒரு பொம்மை அரசைப் போன்றது.
சீனாவின் பக்கம் சாயும் மஹிந்தவை அகற்றுவதற்காக தேர்தல் என்னும் போலி ஜனநாயகம் மூலம் உருவாக்கப்பட்ட கூட்டணி அமைப்பு ஆகும்.
இத்தகைய கூட்டணிக்கு தனது நல்லாதரவை வழங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு 2015ல் முன்வைத்த தீர்மானங்கள் முற்று முழுவதுமாக நிறைவேற்றப்படாமல் இருப்பதை எதிர்த்து கேள்வி கேட்கின்றதா? அல்லது அவை நடைமுறைப்படுத்த தனது அழுத்தங்களை பிரயோகிக்கின்றதா? அல்லது தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றதா இல்லையே,
மாறாக, தீர்மானங்களை நிறைவேற்ற இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும் என இலங்கை அரசுக்கு துதி பாடுகிறார் சுமந்திரன். இலங்கை அரசின் அரசியலையே தமது அரசியலாகக் கொண்டிருக்கும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குக்கான ஒரு சாபக்கேடு ஆகும்.
ஐநா- அமெரிக்கா -இலங்கை அரசு- தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லாம் இப்போது ஒரே நேர்கோட்டில்தான் இயங்குகின்றன. அதாவது எதுவித முரண்பாடுகளும் தமக்குள் இன்றி, இறுதியாக அவர்களுடன் கை கோத்துக்கொண்டு நிற்கின்றது நமது ஒரு சில புலம் பெயர் அமைப்புகள்.
இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
வெளிநாட்டுப் பொறிமுறை தேவை எனக் கூறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கையையே நிராகரிக்கின்றார். இத்தகைய கடும் போக்குள்ள இலங்கை அரசுக்குத்தான் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்தவித ஆட்சேபம் இன்றி ஆதரிக்கின்றார் சுமந்திரன்.
ஆகவே இலங்கை அரசின் முக்கிய நோக்கம் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டையோ நிரந்தரத் தீர்வையோ அல்லது மீள இது போன்று நடைபெறாது என்ற உறுதிப்பாட்டை வழங்குவதோ அல்ல, மாறாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை, போர்க்குற்றம் புரிந்தவர்களைக் காப்பாற்றுவதேயாகும்.
இவ்வாறு மகிந்தவின் நீட்சியாகக் காணப்படும் இவ்வரசுக்குத்தான், மகிந்த உட்பட போர்க்குற்றம் புரிந்தவர்களைக் காப்பாற்ற முனையும் இவ்வரசுக்குத்தான், நல்லாட்சி என்ற பெயரில் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் நிபந்தனையற்ற தனது ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார் கெளரவ எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தர் ஐயா அவர்கள்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ் மக்களுக்கு எதிராகவே களமிறங்கும் கபடதாரிகள் இவர்கள் என மக்கள் நன்குணர வேண்டும்.
2006ல் கொல்லபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள், 2005ல் கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் கொலையின் சூத்திரதாரிகள் கைது செய்து தண்டிக்கப்படவில்லை, இந்நிலையில் இவர்கள்தான் உள்ளகப் பொறிமுறை விசாரணை நடத்தி உண்மையைக் கண்டு பிடிக்கப் போகிறார்களாம்.
யாரைப் பேய்க்காட்ட இந்த போலி நாடகங்கள்?. கடந்த மகிந்தவின் ஆட்சியில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு தமது பிரச்சினைகளை கூறியவர்கள் மிரட்டப்பட்டதும், காணாமல் ஆக்கப்பட்டதும் கடந்த கால வரலாறு.
இதன் பின்னும் உள்ளக பொறிமுறையை ,முற்று முழுதாக நம்ப மக்கள் என்ன முட்டாள்களா?.
இத்தகைய சூத்திரதாரிகளுடன் இணைந்துதான் தாண்டவம் ஆடிக் கொண்டிருகின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.
இத்தனை தடைகளையும் சுயநலங்களையும் தாண்டி ஐநா மூலம் ஒரு சில நன்மைகள் மக்களுக்கு கிடைக்குமாயின் அது வெறும் கண்துடைப்புக்காகவே செய்யப்படும்.
சர்வதேசத்தையும், ஐநா வையும் நம்ப வைப்பதற்காகவே, இலங்கை ஆடும் கபட நாடகத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.
உதாரணமாக இலங்கை மனித உரிமை விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் அதற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது பற்றி ஐரோப்பிய ஜூனியன் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது என்று ஐரோப்பிய ஜூனியன் தெரிவிக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முதல் கேப்பாப்பிலவு மக்கள் வரை அனைவரும் வீதியில் இறங்கி போராடும் இந்தத் தருணத்தில், இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுகின்றது என்று சர்வதேசத்தை நம்ப வைக்கின்றது இலங்கை அரசு.
ஏனெனில் இலங்கையில் ஏற்றுமதியில் மூன்றிலொரு பங்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதனால், இதன் மூலம் வரிச் சலுகை பெற்று தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இலங்கை அரசின் நோக்கமன்றி மக்கள் உரிமைகள் பேணப்படுதல் அல்ல.
மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைக்கான தீர்வுகளில் பெரும்பாலானவை ஐ.நா தீர்மானத்தின் மூலமோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் மூலமோ தீர்க்கப்படமாட்டாது.
ஏனெனில் ஐ.நா வோ அல்லது இலங்கை பேரினவாத சக்திகளோ மக்கள் சார்ந்து இயங்குபவை அல்ல. அவை தமது அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பயன்படுத்துபவை. அவற்றின் உண்மையான நோக்கம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதல்ல.
ஆகவே ஜல்லிகட்டு போராட்டம், கேப்பாப்பிலவு போராட்டம் போன்ற சமகால போராட்டங்கள் நமக்கு உணர்த்தி நிற்பவை என்னவெனில் மக்கள் தாமாகவே ஒன்றிணைந்து போராடும் பொழுது வெற்றிகளைப் பெறலாம் என்பதே.
இனப்படுகொலைக்கான நீதி கேட்டு, மனித உரிமை மீறலுக்கெதிரான, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை மற்றும் நட்ட ஈடு கேட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு போராட்ட சக்தியாக அல்லது போராட்ட அமைப்பாக உருவாக வேண்டும்.
பெரும்திரள்கொண்ட மக்கள் சக்தியாக இவ்வமைப்பு உருவாகும் பொழுது, அவ்வமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற சர்வதேசமோ அல்லது ஐ.நா வோ அல்லது இலங்கை அரசோ முயலும்.
பெரும்திரள் கொண்ட மக்கள் அமைப்பு சர்வதேசத்தின் பக்கம் திரும்பும் போது மக்களின் நியாயமான கோரிக்கைகளை அவர்களால் தட்டிக் கழிக்க முடியாது.
நிரந்தரத் தீர்வு என்பது இவ்வாறே சாத்தியப்படும். இல்லாவிடில் சிறு சிறு கண்துடைப்புகளை செய்துவிட்டு வழமைபோல் இலங்கையும் சர்வதேசமும் நழுவிக் கொள்ளும்.
மறுபடியும் மக்கள் நீதி கேட்டு நடுத்தெருவுக்குத்தான் வரவேண்டி வரும்.
மீண்டும் சம்பந்தன் ஐயா அடுத்த வருடத்துக்குள் தீர்வு என்று சொல்லிக்கொண்டு அடுத்த தேர்தலில் களமிறங்குவார்.
புலம்பெயர் அமைப்புகளுள் கோர்ட்டு சூட்டைப் போட்டுக்கொண்டு அடுத்த கட்ட ஐயப்ப பயணத்துக்கு தயாராகி விடுவார்கள்.