கடந்த 2–ந் தேதி தெற்கு கரோலினா மாகாணத்தில் மற்றொரு இந்தியரான ஹர்னிஷ் பட்டேல் (43) துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாஷிங்டன் மாகாணத்தில் இந்திய வம்சாவளி சீக்கியர் தீப் ராய் (39) என்பவரை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த தீப் ராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவை அனைத்தும் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் என நம்பப்படுகிறது.
இப்படி தொடர்ந்து இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வருவது அங்கு வாழ்கிற இந்தியர்களிடம் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஜெர்சி நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடலை போலீசார் நேற்று மீட்டனர். அவர் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அந்த வாலிபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
அந்த வாலிபர் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும், அவரது இறப்புக்கு தனிப்பட்ட குடும்ப பிரச்சினை தான் காரணம் என அவரது குடும்பத்தினர் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் அவரது இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.