நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- தனுசுடன் அதிக படங்களில் நடிக்கிறீர்களே?
பதில்:- தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், வட சென்னை படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவிதமான திறமைகள் இருக்கிறது. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பார். தனுஷ் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபாத்திரங்கள்தான் கண்முன் வரும். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் திறமையாக நடித்து விடுவார்.
ரேவதி இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகும் குயின் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறேன். சிறுவயதில் ரேவதி படங்களை பார்த்துதான் வளர்ந்து இருக்கிறேன். எனக்கு பிடித்தமான நடிகை. அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருட்டுபயலே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன்.
கேள்வி:- வடசென்னை படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறீர்களா?
பதில்:- அது ஒரு காலகட்டத்தில் நடக்கும் படமாக தயாராகிறது. படப்பிடிப்பு அரங்குகளும் அந்த காலகட்டத்துக்கு ஏற்றமாதிரி இருக்கும். இதில் நான் வட சென்னை பெண்ணாக வருகிறேன். கதை கேட்டதும் இரண்டு நாட்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்தேன். சவாலான வேடம்தான்.
கேள்வி:- டைரக்டர் விஜய்யை விவாகரத்து செய்து இருக்கிறீர்கள். மீண்டும் இருவரும் சேர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- அதுபற்றி எப்படி சொல்ல முடியும். வாழ்க்கையில் பல நிலைகள் இருக்கிறது. தெரியாத விஷயங்களை கற்பனை செய்ய முடியாது.
கேள்வி:- விஜய் மீது உங்களுக்கு கோபம் இருக்கிறதா?
பதில்:- இல்லை. இப்போதும் எனக்கு பிடித்தவராகவே அவரை பார்க்கிறேன். நாங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் அற்புதமான விஷயங்களை கற்று இருக்கிறோம்.
கேள்வி:- நடிப்பு மீது விரக்தி ஏற்படுகிறதா?
பதில்:- நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். நடிப்பது மிகவும் பிடிக்கிறது. படப்பிடிப்பு அரங்குகளை எனது வீடு மாதிரி பார்க்கிறேன். பகல் இரவில் ஓய்வில்லாமல் கூட நடிக்கிறேன். நடிப்பில் எப்போதுமே சோர்வு வந்தது இல்லை. சினிமாவில் நடிப்பதற்காகவே வாழ்கிறேன்.
கேள்வி:- எதிர்கால திட்டம் என்ன?
பதில்:- தொழில் அதிபராக மாற திட்டமிட்டு இருக்கிறேன். இந்த சமுதாயம் எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. அதற்கு திருப்பி கொடுக்க வேண்டியது எனது கடமை. சென்னையில் ஓட்டல் தொடங்க இருக்கிறேன். அந்த ஓட்டலில் யோகா, தியானம் கற்றுக்கொடுக்கும் மையங்களையும் அமைத்து பயிற்சி அளிக்கப்படும். ஆரோக்கியமானதாக எனது வாழ்க்கை முறையை மாற்றவும் முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அமலாபால் கூறினார்.