அன்னிய முதலீடுகளை பெறும் திட்டத்துடன் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியினர் இதற்காக மோடியை கேலியும் கிண்டலும் செய்தனர். என்றாலும் பிரதமர் மோடி அதைப் பொருட்படுத்தாமல் வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்தி வருகிறார்.
கடந்த 6 மாதமாக பிரதமர் நரேந்திர மோடி எந்த வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை. இந்த நிலையில் அவர் வரும் மே, ஜுன் மாதங்களில் 5 வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இலங்கை, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, கஜகஸ்தான் நாடுகளுக்கு அவர் செல்ல உள்ளார். மே மாதம் 2-வது வாரம் இலங்கையில் புத்த மாநாடு நடக்கிறது.
அதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிறகு அங்கு நுவரெலியாவில் இந்தியா நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
மே மாத இறுதியில் ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகளுக்கு மோடி செல்வார். அந்த நாடுகளுடன் தொழில் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உடன்பாடுகளில் பிரதமர் மோடி கையெழுத்திடுவார்.
ஜுன் 7, 8-ந்தேதிகளில் கஜகஸ்தான் செல்கிறார். அங்கு நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஷாங்காய் கூட்டு அமைப்பில் இந்தியாவை உறுப்பினர் ஆக்க உள்ளார்.
ஜூலை மாதம் இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். மோடியின் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.