ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட உள்ள புதிய யோசனைகளின் வரைவு தீர்மானங்கள் இன்று பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரைவு யோசனைகளின் முதல் கட்ட வரைவு தீர்மானங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று முதல் மேற்படி தீர்மானங்கள் தொடர்பாக கருத்து வெளியிடவும் கலந்துரையாடல்களை நடத்தவும் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கடந்த கூட்டத் தொடரில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனையில் அடங்கிய யோசனைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் புதிய வரைவு தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அறிக்கையிட வேண்டும் என்ற யோசனையும் வரைவு தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த வரைவு தீர்மானங்களில் திருத்தங்களை செய்யவும் உள்ளடக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நீக்கவும் இன்று முதல் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் ஜெனிவா தகவல்கள் கூறுகின்றன.