வடமாகாண சபையின் சிறப்பு அமர்வை ஒத்தி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த முதலாவது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இரண்டாவது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண குடிநீர் தேவைகள் மற்றும் நீர் தேவைகள் தொடர்பாக ஆய்வுகளை நடத்துவதற்கு கடந்த மாதம் சிறப்பு அமர்வொன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்போது அந்த அமர்வை ஒத்திவைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் கேட்டிருந்தார். எனினும் அன்றைய தினம் முதலமைச்சருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அன்றைய அமர்விலேயே 7ம் திகதி (இன்றைய தினம்) நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த 28 ஆம் திகதி முதலமைச்சர் மேற்படி சிறப்பு அமர்வினை ஒத்திவைக்கும்படி கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக இன்றைய அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த அமர்வை நடத்துவதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளதாகவும் கூறியிருந்தார். அந்த விடயம் சபை நடவடிக்கை குழுவில் ஆராயப்பட்டதற்கு இணங்க சிறப்பு அமர்வை ஒத்திவைக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டது.
என கடந்த 01.03.2017 ஆம் திகதி முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறினார். இதேபோல் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இந்த அமர்வினை ஒத்திவைக்கும்படியும் கேட்டதுடன் மேலும் சிலர் முதலமைச்சரின் கோரிக்கையை நிராகரிக்கும்படியும் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.