ஜெயலலிதா சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை முரண்பாடான அறிக்கை வெளியிட்டுள்ளது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 23ம் திகதி அப்பல்லோ வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
டிசம்பர் 5ம் திகதி ஜெயலலிதா காலமானார், இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
உச்சகட்டமாக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அதிமுகவின் ஓபிஎஸ் அணி வலியுறுத்தியது.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
தற்போதைய அப்பல்லோ அறிக்கையில், செப்டம்பர் 22ம் போயஸ் கார்டன் பங்களாவில் மயங்கிய நிலையில் ஜெயலலிதா இருந்தார்.
அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் இருந்தது என குறிப்பிடப்படவில்லை.
அப்பல்லோவின் செப்டம்பர் 23ம் தேதி அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்குமான மிக முக்கியமான முரண்பாடுதான் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
அப்பல்லோ மருத்துவமனை முதலில் பொய் சொன்னதா? அல்லது பொய் சொல்ல வைக்கப்பட்டதா? என்ற பூதாகர கேள்வி எழுந்துள்ளது.